

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள் தவறாது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு, ஃபைபர்படகு உள்ளிட்டவற்றின் மூலம் கடலுக்குச் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். தற்போது, மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால், விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் செல்ல அனுமதி இல்லை. இதனால், ஃபைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இவ்வாறு மீனவர்களால் பிடித்து வரப்படும் மீன்கள், காசிமேடு துறைமுகத்தில் உள்ள நவீன மீன் விற்பனை அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அங்கு மீன்களை ஏலம் விடுவது, விற்பனை செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் மீனவர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து விற்பனையில் ஈடுபடுவது இல்லை. பொதுமக்களும் மீன்களை வாங்கவரும்போது, கூட்டம் அதிகரித்துசமூக இடைவெளி கேள்விக்குறியாகி வருகிறது.
இந்நிலையில், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் தவறாது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
விழிப்புணர்வு
இது தொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, "நவீன மீன் விற்பனை அங்காடியில் மீன் விற்பனை, ஏலம் விடும் பணிகளில் ஈடுபடும் வியாபாரிகள், மீனவர்களுக்கு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதுதவிர, போலீஸாரும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடும் நடவடிக்கை
இச்சூழலில், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள், மீனவர்கள் ஆகியோர் தவறாது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளோம்" என்றனர்.