Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

5 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியைத் தருவோம்; எங்கள் கூட்டணியின் தலைவர் ரங்கசாமி: பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா உறுதி

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக6 இடங்களில் வெற்றி பெற்றது.இந்நிலையில் புதிய எம்எல்ஏக்களுடன் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. ஆகியோர் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். இதில், பாஜகவின் புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

பின்னர் நிர்மல்குமார் சுரானா செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக போட்டியிட்ட 9 தொகுதிகளில் 6-ல் வெற்றி பெற்றுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆனால், 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும், காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்று தீவிரமாக களப்பணியாற்றினோம். அதன் பலனாய் புதுச்சேரியில் முதன் முறையாக அமைச்சரவையில் இடம்பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளோம்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த தேர்தல் முடிவு மூலம் அறிய முடிகிறது. தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி 2 முறையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 முறையும் புதுச்சேரிக்கு வந்தனர். அப்போது அவர்கள் புதுச்சேரியை ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவோம். மத்திய அரசின் திட்டங்களை புதுச்சேரிக்கு கொண்டு வருவோம் என்று கூறினார்கள். புதுச்சேரியில் பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை அமைத்து, புதுச்சேரியை முதன்மையான மாநிலமாக மாற்றுவோம். மக்கள்நலத்திட்டங்கள் செயல்படுத்துவோம். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும், தேர்தலுக்காக உழைத்த கட்சிநிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ரங்கசாமி தலைமையில் தான் தேர்தலை சந்தித்து சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. அவர் தான் இக்கூட்டணியின் தலைவர். எனவே, மரியாதை நிமித்தமாக ரங்கசாமியை சந்தித்து பேசினேன். முதல்வர் பதவிக்கு பாஜக போட்டியிடவில்லை.

ஆனால், முதல்வர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் அமர்ந்து பேசி முதல்வரை முடிவு செய்வோம். அதன் பிறகு ஆளுநரை சேர்ந்து சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, மாநில தலைவர் சாமிநாதன் கூறுகையில், “2001ம் ஆண்டு பாஜக எம்எல்ஏவாக கிருஷ்ணமூர்த்தி தேர்வுசெய்யப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு செல்கின்றனர். காங்கிரஸூக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாத நிலை உருவாகி விட்டது. புதுச்சேரியில் அசைக்க முடியாத சக்தியாக பாஜக உயர்ந்துள்ளது” என்றார்.

அடுத்த 5 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை அமைத்து, புதுச்சேரியை முதன்மையான மாநிலமாக மாற்றுவோம். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x