

மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஆர்.பி. உதய குமார், திமுகவில் புறநகர் மாவட்ட செயலர் மணிமாறன், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் என 25 பேர் போட் டியிட்டனர்.
இத்தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மதுரை தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. மொத்தம் 2,20,953 வாக்குகள் பதிவாகின. 30 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.
ஓரிரு சுற்றில் மிகக் குறைந்த அளவில் திமுக வேட்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மற்ற சுற்றுகளில் ஆர்.பி.உதய குமார் 2 ஆயிரம் வாக்குகளுக்கு அதிகமாக முன்னிலை வகித்தார்.
இதற்கிடையில் 14-வது சுற்று வாக்கு எண்ணும்போது 134-வது வரிசை எண் வாக்குப்பதிவு இயந்திரம் எடுக்கப்பட்டது. அந்த பெட்டிக்குள் 132-வது எண் கொண்ட வாக்குப்பதிவு இயந்திரம் இருப்பது தெரிந்து. இதற்கு திமுக வேட்பாளரின் முகவர் ஆதிமூலம் உள்ளிட்டோர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் அதிகாரிகள், திமுக முகவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் மணிமாறன், அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் ஆகியோர் அங்கு வந்தனர். வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் எழுத்துப்பூர்வ புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட மின்னணு இயந் திரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தவறு எதுவும் நடக்கவில்லை. பெட்டிக்குள் இருக்கும் இயந்திரம் ஆவணத்தின் அடிப்படையில் இருப்பதாகவும், புகாரை தள்ளுபடி செய்வதாகவும் தேர்தல் அலுவலர் சவுந்தர்யா அறிவித்தார்.
இருப்பினும் திமுகவினர் மீண்டும் தேர்தல் நடத்தக் கோரினர். மாவட்ட ஆட்சியர் அன்பழகன், காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, துணை ஆணையர்கள் பாஸ்கரன், சிவபிரசாத் ஆகியோரும் அங்கு வந்தனர். அவர்கள் திமுகவினரிடம் பேசினர். தவறு நடக்கவில்லை. தொடர்ந்து வாக்குகளை எண்ண ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இருப்பினும் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை கடைசியாக எண்ணலாம் என அறிவித்துவிட்டு நான்கு மணி நேரத்துக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங் கியது.
இதனால் வாக்கு எண்ணும் பணி விடியவிடிய நீடித்தது. அதிமுக வேட்பாளரே தொடர்ந்து முன்னிலை வகித்தார். அதிகாலை 4 மணி அளவில் வாக்கு எண்ணும் பணி முடிவடைந்தது.
அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமார் 1 லட்சத்து 338 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் மணிமாறன் 86,251 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். 14,087 வாக்குகள் வித்தி யாசத்தில் உதயகுமார் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.
சுமார் 4 மணி நேரத்துக்கு முன்னதாக வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து காத்திருந்த ஆர்.பி. உதயகுமார் தனது வெற்றிச் சான்றிதழைப் பெற்றார்.