Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு 75 வயதில் பாஜக எம்எல்ஏவாக தேர்வான எம்.ஆர்.காந்தி: 6 முறை தோல்விக்கு பிறகும் தளராமல் சாதனை

நாகர்கோவில்

நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கி தனது 75-வது வயதில் வெற்றிபெற்று தமிழக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைக்கிறார், எளிமையான அரசியல்வாதி என்று பெயரெடுத்த எம்.ஆர்.காந்தி. 1980-ம் ஆண்டு முதல் 6 முறைதேர்தலில் போட்டியிட்டு தோல்விகளை சந்தித்தாலும், மனம் தளராமல் அவர் சாதித்திருக்கிறார்.

தேசியக் கட்சியான பாஜகவின் வளர்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் என்ற பெருமைபெற்றவர் எம்.ஆர்.காந்தி. காலில் செருப்பு கூட அணியாமல் எளிமையான வாழ்க்கை முறையை கடைபிடித்து வரும் இவர், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பினரின் அன்பை பெற்றவர்.

6 முறை தோல்வி

திருமணமாகாத இவர், 1980-ம்ஆண்டில் இருந்து 6 முறை நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரிசட்டப்பேரவைத் தொகுதிகளில்போட்டியிட்டு குறைந்த வாக்குகள்வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். மக்கள் மத்தியில் ஆதரவும், செல்வாக்கும் இருந்த போதும் எம்எல்ஏவாக முடியவில்லையே என்ற ஏக்கம் அவரிடம் இருந்தது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கிகள் இருந்த போதும், வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் அவை கைகொடுக்கவில்லை என்ற ஆதங்கம் அக்கட்சி தலைமைக்கும் இருந்து வந்தது.

1996-ம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழகத்தின் முதல் பாஜக எம்எல்ஏ என்ற பெருமை பெற்ற வேலாயுதத்துக்கு பின்னர், இதுவரை வேறுயாரும் சட்டப்பேரவை தேர்தலில் குமரி மாவட்டத்தில் முத்திரை பதிக்கவில்லை. மக்களவை தேர்தலில் மட்டும்பொன் ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் இருமுறை வாகை சூடினார்.

திமுகவுடன் நேரடிப் போட்டி

75 வயதான எம்.ஆர்.காந்திக்கு கடைசி வாய்ப்பாக தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியது. கடந்த 2016-ம் ஆண்டு இதே தொகுதியில் அவர் போட்டியிட்டு திமுகவின் சுரேஷ்ராஜனிடம் தோல்வியடைந்தார். இம்முறையும் சுரேஷ்ராஜன், எம்.ஆர்.காந்தி இடையே நேரடிப் போட்டி நிலவியது.

இந்து, கிறிஸ்தவ சமுதாயத்தின் வாக்குகள் சரிவிகிதமாக உள்ள நாகர்கோவில் தொகுதியில் பாஜக வெற்றிபெறுவது எளிதல்ல. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே வாக்குகேட்டு தொகுதி முழுவதும் எம்.ஆர்.காந்தி வலம் வந்தார். ஆதரவாளர்கள் போதிய அளவு இல்லாத நிலையில் வயோதிகத்தையும் பொருட்படுத்தாமல், அவர் வீடு, வீடாக நடந்தேசென்று வாக்கு சேகரித்து வந்தார். ஜாதி,மதத்துக்கு அப்பாற்பட்டு அவருக்கு சாதகமான அலை வீசத் தொடங்கியது.

தொகுதி பிரச்சினைக்கு யாரும் எப்போது வேண்டுமானாலும் இவரை அணுகலாம் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் துளிர் விட்டது. எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் சுரேஷ்ராஜன் தனது அரசியல் அனுபவத்தின் மூலம் தேர்தல் பணியில் தீவிரம் காட்டினார். இருவர் மத்தியிலும் போட்டி கடுமையாக இருந்த நிலையில் எம்.ஆர்.காந்திக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது.

இறுதியில் எம்.ஆர். காந்தி வெற்றிபெற்று, குமரி மாவட்டத்தி்ல் இருந்து25 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவையில் பாஜகவின் பிரதிநிதியாக காலடி எடுத்து வைக்கிறார். தனது கடைசி காலத்தை மக்களின் சேவைக்காக அர்ப்பணிப்பேன் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

நாகர்கோவில் நகரில் தீராமல் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு, பாதாள சாக்கடை திட்டம் போன்ற கடும் சவால்கள் அவர் முன் காத்திருக்கும் நிலையில்,மிகுந்த எதிர்பார்ப்பில் வாக்களித்த மக்களுக்கு அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x