Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7 தொகுதிகளை கைப்பற்றிய திமுக கூட்டணி - ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த அதிமுக வேட்பாளர் சு.ரவி

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 7 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியினர் வெற்றிபெற்றுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகள், ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகள் என மொத்தம் 9 தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் 7 தொகுதிகளை திமுகவும், அரக்கோணம் மற்றும் கே.வி.குப்பம் என 2 தொகுதிகளை அதிமுகவும் கைப்பற்றியுள்ளன.

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியை கடும் போராட் டத்துக்கு மத்தியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றியுடன் 8-வது முறையாக கைப்பற்றியுள்ளார்.

தலைநகர் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏவாக உள்ள கார்த்திகேயன், அதிமுக வேட்பாளராக எஸ்.ஆர்.கே.அப்பு இடையே நேரடி போட்டி இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு கட்சியில், பொதுமக்களிடம் இருந்த எதிர்ப்புகளையும் தாண்டி சிறுபான்மையினர் வாக்குகள் சுமார் 90 சதவீதம் அளவுக்கு பெற்றதுடன், முதலியார் சமூக வாக்குகள், அவருக்கான தனிப் பட்ட செல்வாக்குடன் கார்த்தி கேயன் தொடர்ந்து இரண்டாவது முறையாக 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

அணைக்கட்டு தொகுதியில் திமுக சார்பில் மாவட்ட செயலாள ரும் தற்போதைய எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார், அதிமுக சார்பில் புறநகர் மாவட்ட செய லாளர் வேலழகன் பிரதான வேட்பாளர்களாக போட்டியிட்டனர். உள்ளூர் வேட்பாளர், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர், பாமக கூட்டணி ஆகிய பலத்துடன் அதிமுக களத்தில் தீவிரம் காட்ட, தொகுதியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்ட உதவிகள், அடிப் படை வசதிகளுக்காக அரசு நிர்வாகத்துடன் போராடியது, மலைக்கிராம மக்களின் அடிப் படை வசதிகளுக்காக குரல் கொடுத்தது போன்ற பல்வேறு காரணங்களால் திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளார். சுமார் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள இவர் அணைக்கட்டு தொகுதியை முன்னாள் அதிமுக அமைச்சர் பாண்டுரங்கனுக்கு அடுத்தபடியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஏ.பி.நந்தகுார் கைப்பற்றியுள்ளார்.

தொகுதி மறு சீரமைப்பின்படி கே.வி.குப்பம் தனி தொகுதி 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதிமுகவின் கோட்டையாக இருந்து வரும் இந்தத் தொகுதி மூன்றாவது முறையாக அதிமுக வசமாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தியும், திமுக சார்பில் இரண்டாவது முறையாக சீதாராமன் போட்டியிட்டனர். கடும் போட்டிக்கு மத்தியில் நிலையான பாமக, அதிமுக வாக்குவங்கியுடன் ஜெகன்மூர்த்தி வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக வேட்பாளர் ஒருவர் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.

குடியாத்தம் (தனி) தொகுதியில் இந்தமுறை பிரதான கட்சிகள் சார்பில் பெண்கள் போட்டியிட்டனர். கடந்த முறை கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் அமலு, இந்தமுறை குடியாத்தம் தொகுதியில் களமிறங்கினார். அதிமுக சார்பில் பரிதா, அமமுக சார்பில் ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில், சுமார் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வசமாகியுள்ள இந்த தொகுதியின் நான்காவது பெண் எம்எல்ஏவாக அமலு தேர்வாகி சட்டப்பேரவைக்கு செல்ல உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம்

அரக்கோணம் (தனி) தொகுதியில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு முறை அதிமுக எம்எல்ஏவாக தேர்வான சு.ரவி இந்தத் தேர்தலில் நான்காவது முறையாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் விசிக சார்பில் கவுதம் சன்னா பானை சின்னத்தில் போட்டியிட்டதால் ஆரம்பத்தில் இருந்தே அதிமுக வேட்பாளர் சு.ரவியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட தொகுதியாக இருந்தது. வாக்கு எண்ணிக்கையில் எதிர்பார்த்தபடி 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் தொடர்ந்து மூன்றாவது சட்டப் பேரவைக்கு சு.ரவி தேர்வாகி யுள்ளார்.

சோளிங்கர் தொகுதியை திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில், ராணிப்பேட்டை தேர்தல் களம் இந்தமுறை வாக்குப்பதிவு நாள் வரை கடும் போட்டி நிறைந்ததாக இருந்தது.

திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான ஆர்.காந்தியும், அதிமுக சார்பில் பிரபல கட்டுமான தொழிலதிபர் எஸ்.எம்.சுகுமார் இடையே ஆரம்பத்தில் இருந்தே கடுமையான போட்டி இருந்தது. துல்லியமான தேர்தல் பிரச்சார வியூகம், சிறுபான்மையினர் வாக்கு களை சிதறாமல் பார்த்துக் கொண்டது, இதனால் திமுக வேட்பாளர் ஆர்.காந்தி, சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6-வது முறையாக ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வரும் ஆர்.காந்தி, நான்காவது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ளார்.

பாமகவின் ஆதிக்கம் நிறைந்த ஆற்காடு தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், முன்னாள் பாமக எம்எல்ஏ கே.எல்.இளவழகன் இடையே நேரடி போட்டி இருந்தது. கிளீன் இமேஜ் மற்றும் முதலியார் சமூக வாக்குகள், கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கணிசமான வாக்குகள் போன்ற காரணங்களால் திமுக வேட்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார்.

ஆற்காடு தொகுதியில் முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு அடுத்த படியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தேர்வாகி இருப்பவர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை தேர்தல் களம் இந்தமுறை வாக்குப்பதிவு நாள் வரை கடும் போட்டி நிறைந்ததாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x