Published : 03 May 2021 09:03 PM
Last Updated : 03 May 2021 09:03 PM

தி.மலை மாவட்டத்தில் 'தனி ஒருவனாக'  5.40% வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி: 2 தொகுதிகளில் திமுக வெற்றிக்கு முட்டுக்கட்டை  

சீமான்: கோப்புப்படம்

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5.40% வாக்குகளை 'தனி ஒருவனாக' பெற்று நாம் தமிழர் கட்சி அசத்தியுள்ளது.

ஊடக செல்வாக்கு, முன்னணித் தலைவர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரம் என அசுர பலத்துடன் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தன. மேலும், தேர்தல் பிரச்சாரக் களத்தில் அமமுகவும், மக்கள் நீதி மய்யமும் செல்வாக்கைப் பெற்றிருந்தன. அவர்களுக்கான பிரச்சார வியூகங்களை முன்னணி ஆலோசகர்கள் வழங்கினர்.

அதே நேரத்தில், எந்த விதமான செல்வாக்கும், பிரச்சார வியூகமும் இல்லாமல் தேர்தலை எதிர்கொண்டது நாம் தமிழர் கட்சி. பிரம்மாண்ட விளம்பரம் ஏதும் இல்லாமல், 'விவசாயி' சின்னம், பட்டிதொட்டியெல்லாம் கொண்டுசெல்லப்பட்டது. சீமான் என்கிற ஒற்றை நபரை நம்பியே களம் கண்டது. இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில், கணிசமான வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டனர் நாம் தமிழர் கட்சியினர். பெரிய அளவில் பிரச்சாரம் இல்லை என்றாலும், நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில், விவசாயி சின்னம் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர். அவர்களது உழைப்புக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

திருவண்ணாமலை தொகுதியில் 13 ஆயிரத்து 995 வாக்குகளும், போளூர் தொகுதியில் 10 ஆயிரத்து 197 வாக்குகளும், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 11 ஆயிரத்து 541 வாக்குகளும், செங்கம் தொகுதியில் 12 ஆயிரத்து 80 வாக்குகளும், கலசப்பாக்கம் தொகுதியில் 8 ஆயிரத்து 822 வாக்குகளும், ஆரணி தொகுதியில் 10 ஆயிரத்து 491 வாக்குகளும், செய்யாறு தொகுதியில் 12 ஆயிரத்து 192 வாக்குகளும், வந்தவாசி தொகுதியில் 9,284 வாக்குகளும் என, மாவட்டத்தில் மொத்தம் 88 ஆயிரத்து 602 வாக்குகள் பெற்றுள்ளனர். 8 தொகுதிகளிலும் பதிவான 16 லட்சத்து 41 ஆயிரத்து 169 வாக்குகளில் 5.40% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் வியக்கத்தக்க வகையில் அவர்கள் பெற்ற வாக்குகள், திமுக மற்றும் அதிமுக தோல்விக்குக் காரணமாகவும் அமைந்துள்ளது என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள். மேலும், அவர்கள் கூறும்போது, "ஆரணி தொகுதியில் வெற்றி பெற்று அதிமுகவின் வாக்கு வித்தியாசம் 3,128 ஆகும். இந்தத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி 10 ஆயிரத்து 491 வாக்குகள் பெற்றுள்ளது. போளூர் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் வாக்கு வித்தியாசம் 9,725 ஆகும். இந்தத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி 10 ஆயிரத்து 197 வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் திமுகவின் வெற்றிக்கு நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன. இதேபோல், செங்கம் தொகுதியில் அதிமுகவுக்கு பாதிப்பைக் கொடுத்துள்ளது.

திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று, தேர்தல் களத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் எனப் பெருமையுடன் கருத்து தெரிவிக்கும் கட்சிகளுக்கு விதிவிலக்காக, தனித்துக் களம் கண்டு, தனது செல்வாக்கை ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வரும் நாம் தமிழர் கட்சியைப் பாராட்டலாம்" என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x