படுக்கை வசதிகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிர்; தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்க: அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின்.
அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின்.
Updated on
1 min read

ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, வரும் 7-ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், இன்று (மே 03) சென்னை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

புதிய அரசு பதவியேற்பு மற்றும் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் எவ்வாறு பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்துவது என, இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், தமிழகத்தில் தொற்றுப் பரவல் விகிதம், இறப்பு விகிதம், தொற்றைக் கட்டுப்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆலோசனை குறித்து, மு.க.ஸ்டாலின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை:

"தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் இச்சூழலில், இத்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், வருவாய்த்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் பிற சுகாதாரத்துறை அலுவலர்களோடு இன்று எனது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தின்போது, கரோனா தடுப்பு, மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவிதமான தொய்வுமின்றி முழு முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினேன்.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு சென்னையில் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் அரசால் வழங்கப்படுவது போன்று, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவ சிகிச்சைகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன், மருந்துப் பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தினேன்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in