வரலாறு காணாத மழைப்பதிவை நூலிழையில் தவறவிட்ட சென்னை

வரலாறு காணாத மழைப்பதிவை நூலிழையில் தவறவிட்ட சென்னை
Updated on
1 min read

இந்த நூற்றாண்டில் நவம்பர் மாதத்தில் அதிக மழை பொழிவு என்ற வரலாற்று சாதனையை நூலிழையில் தவறுவிட்டுள்ளது தலைநகரம் சென்னை.

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் சென்னையில் நவம்பர் மாதத்துகான மழைப்பதிவு 1049.3 மிமீ பதிவாகியுள்ளது. இது, இந்த நூற்றாண்டில் இரண்டாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னையில் பெய்த அதிக மழையளவு ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் 1088.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் கடந்த சில வாரங்களாக சென்னையில் கனமழை பெய்து வந்ததால் சென்னையில் 2015 நவம்பர் மாத மழையளவு பழைய சாதனையை முறியடித்து இந்த நூற்றாண்டில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக சென்னையில் மழையளவு சற்று குறைந்தது. இதனால், நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில் சென்னையில் 1049.3 மிமீ மழை பதிவானது. இதனால், சென்னை புதிய சாதனையை நூலிழையில் தவறிவிட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் நீடிக்கிறது. இது மிகவும் மெதுவாக நகர்ந்து இலங்கை அருகில் சென்று தொடர்ந்து அரபிக்கடல் பகுதியில் சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை மிகவும் மெதுவாக நகர்ந்து வருவதால், தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

செவ்வாய், புதன் கிழமைகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் 125 மி.மீ. மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in