Last Updated : 03 May, 2021 10:08 PM

 

Published : 03 May 2021 10:08 PM
Last Updated : 03 May 2021 10:08 PM

கட்சியின் வெற்றிப் பட்டியலில் இடம்பெற்ற மதுரை வடக்கு தொகுதியை பாஜக இழந்தது எப்படி?

சரவணன்: கோப்புப்படம்

மதுரை

மதுரை வடக்கு தொகுதியில், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினரால் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் மதுரை வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. மதுரை நகர் பகுதியை உள்ளடக்கிய மதுரை வடக்கில் அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர் அதிக அளவில் உள்ளனர்.

பாஜக மாநிலப் பொதுச் செயலர் ஸ்ரீனிவாசன் முதலில் மதுரை வடக்கில் போட்டியிடுவதாக இருந்தது. பின்னர், திமுகவில் சீட் கிடைக்காமல் கடைசி நேரத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மருத்துவர் பா.சரவணன் மதுரை வடக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சரவணன் முதலில் திமுகவிலும், பின்னர் மதிமுக, அடுத்து பாஜக, மீண்டும் திமுகவில் சேர்ந்தார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பொதுத் தேர்தலில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்திருந்தார். எந்தத் தொகுதியிலும் சீட் வழங்கப்படாத நிலையில், பாஜகவில் இணைந்த 3 மணி நேரத்தில் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீனிவாசன் ஆதரவாளர்கள் பாஜக தேர்தல் அலுவலகத்தைப் பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை பாஜக தலைவர்கள் சமாதானப்படுத்தினர். மதுரை வடக்கில் திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கோ.தளபதி போட்டியிட்டார். இவர் வேறு தொகுதியைச் சேர்ந்தவர். திமுகவில் தனக்கு சீட் கிடைக்காமல் தடுத்தவர்களில் தளபதியும் ஒருவர் என நினைத்து, அவரைத் தோற்கடிக்கும் வேகத்தில் தேர்தல் களத்தில் தீவிரமாக ஈடுபட்டார் சரவணன்.

பிரதமர் மோடி மதுரை அம்மா திடலில் சரவணனுக்காகப் பிரச்சாரம் செய்தார். மத்திய அமைச்சர் வி.கே.சிங் மதுரையில் முகாமிட்டு, சரவணன் வேட்புமனுத் தாக்கல் செய்ததில் இருந்து உடனிருந்து தேர்தல் பணியாற்றினார். பாஜகவில் உள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் சரவணனுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்தனர். மதுரை மாவட்ட மொத்த பாஜகவினரும் மதுரை வடக்கில் தேர்தல் பணியாற்றினர்.

இதனால், கோ.தளபதிக்குச் சரியான போட்டியைக் கொடுப்பார், சரவணன் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது என பாஜகவினர் பேசி வந்தனர். பாஜக வெற்றிப் பட்டியலில் மதுரை வடக்கு தொகுதியும் இடம் பெற்றிருந்தது. ஆனால், இறுதியில் 22 ஆயிரத்து 916 வாக்குகள் வித்தியாசத்தில் பா.சரவணன் தோல்வியைத் தழுவினார். கோ.தளபதி 73 ஆயிரத்து 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்தத் தொகுதியில், கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் வி.வி.ராஜன்செல்லப்பா. இவர் மீது தொகுதி மக்கள் அதிருப்தியில் இருந்தனர். இதனால், அவர் திருப்பரங்குன்றம் தொகுதிக்குச் சென்றுவிட்டார். இத்தொகுதி அதிமுகவினர் சரவணனுக்குச் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. பிரச்சாரத்துக்கும் உடன் செல்லவில்லை. இதனால் சரவணன் கூட்டணிக் கட்சியினர் இல்லாமல்தான் பிரச்சாரம் செய்து வந்தார்.

அதிமுகவினர் ஒத்துழைக்க மறுத்தது, பல்வேறு கட்சிகளுக்குச் சென்று வந்தது, கட்சியில் சேர்ந்த 3 மணி நேரத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் பாஜகவினர் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி, தொகுதியில் அதிகமாக உள்ள அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர் வாக்குகளால் பாஜக மேலிடத்தின் வெற்றிப் பட்டியலில் இடம் பெற்றிருந்த பா.சரவணன் தோல்வியைத் தழுவியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x