Published : 03 May 2021 07:04 PM
Last Updated : 03 May 2021 07:04 PM

காட்பாடி தொகுதியில் 10-வது முறையாகப் போட்டியிட்ட துரைமுருகனைக் கடைசி சுற்றுவரை திணறடித்த அதிமுக வேட்பாளர்

வெற்றிச் சான்றிதழைப் பெற்ற துரைமுருகன்.

வேலூர்

காட்பாடி தொகுதியில் முதல் முறையாக சட்டப்பேரேவைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரிடம், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கடுமையான போட்டிக்கு மத்தியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது, நட்சத்திர வேட்பாளர் அந்தஸ்துள்ள காட்பாடி தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழக அரசியலில் 50 ஆண்டு காலம் அனுபவம் கொண்டவரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், இந்தத் தொகுதியில் 10-வது முறையாகப் போட்டியிட்டார். பழுத்த அரசியல்வாதியான துரைமுருகனுக்கும் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்ட அதிமுக வேட்பாளர் வி.ராமு மீதான எதிர்பார்ப்பும் வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்தது.

அதிமுக வேட்பாளராக வி.ராமு அறிவிக்கப்பட்டபோது, 'துரைமுருகனுக்கு எதிராக நிறுத்தப்பட்ட 'டம்மி' வேட்பாளர். அமைச்சர் வீரமணி சிபாரிசால் நிறுத்தப்பட்டுள்ளார்' என்று அதிமுகவினரே கூறி வந்தனர். ஆனால், தான் அனுபவமிக்க அரசியல்வாதி என்பதை இந்தத் தேர்தலில் நிரூபித்துள்ளார் வி.ராமு.

வி.ராமு

காட்பாடியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே ராமுவின் கை ஓங்கி இருந்தது. வாக்குச்சாவடிகள் வாரியாக வாக்குகள் வித்தியாசம் இருந்தாலும் சுற்றுகள் அடிப்படையில், முதல் சுற்றில் இருந்து 8-வது சுற்று வரை ராமு முன்னிலை வகித்து வந்த நிலையில், 9-வது சுற்றில் தொடங்கி, 20-வது சுற்று வரை திமுக வேட்பாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

22-வது சுற்றில் இருந்து 25-வது சுற்று வரை அதிமுக வேட்பாளர் மீண்டும் முன்னிலை வகித்தார். துரைமுருகன் 82 ஆயிரத்து 477 வாக்குகளும் ராமு 82 ஆயிரத்து 787 வாக்குகள் பெற்று துரைமுருகனை விட 310 வாக்குகளுடன் முன்னணிக்குச் சென்றார். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

கை கொடுத்த தபால் வாக்குகள்

காட்பாடி தொகுதியில் மொத்தம் 3,349 தபால் வாக்குகள் பெறப்பட்டிருந்தன. இதில், காலை 8 மணிக்கு 1,500 தபால் வாக்குகளை எண்ணியதில், திமுகவுக்கு 876, அதிமுகவுக்கு 306 வாக்குகள் கிடைத்தன. இரண்டாம் கட்டமாக தள்ளுபடி செய்யப்பட்ட தபால் வாக்குகள்போக மீதமிருந்த 1,308 தபால் வாக்குகள் எண்ணும் பணி இரவு 9 மணியளவில் நடைபெற்றது. இதன் முடிவில், மொத்த தபால் வாக்குகளில் 1,778 திமுகவுக்கும் 608 அதிமுகவுக்கும் கிடைத்தது. இதன்மூலம், துரைமுருகன் 84 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரை விட 860 வாக்குகள் முன்னிலை பெற்றார்.

பதற்றத்தைக் கூட்டிய இயந்திரங்கள்:

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது, முதல் சுற்றில் 4-வது வாக்குச்சாவடி, 2-வது சுற்றில் 7 மற்றும்12-வது வாக்குச்சாவடிகள், 11-வது சுற்றில் 110-வது வாக்குச்சாவடி, 18-வது சுற்றில்180-வது வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக எண்ணப்படாமல் தனியாக வைக்கப்பட்டன. அந்த இயந்திரங்களை மீண்டும் எண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, காவலர்கள் பாதுகாப்புடன் மீண்டும் எடுத்துவரப்பட்டு அந்த ஐந்து இயந்திரங்களின் தொழில்நுட்பப் பிரச்சினை தீர்க்கப்பட்டு, வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. ஒவ்வொரு இயந்திரத்தின் வாக்குகள் எண்ணப்படும்போதும் இரு தரப்பினர் இடையில் பதற்றம் காணப்பட்டது.

ஐந்து இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை முடிந்தபோது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் அங்கிருந்த திமுகவினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டு பலத்த கரகோஷத்தை எழுப்பினர்.

அதேநேரம், விளிம்பு நிலை வரை சென்று வெற்றியைத் தவறவிட்ட அதிமுக வேட்பாளரும் அவரது ஆதரவாளர்களும் கடைசிவரை மிரட்டிவிட்டோம் என்ற இறுமாப்புடன் வாக்கு எண்ணும் மையத்தைவிட்டு வெளியேறினர்.

அலெக்சாண்டர் கால் தடம்:

வெற்றிக்குப் பின் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறும்போது, "திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றதற்கு முதல் காரணம் எங்களுடைய கட்சியின் தலைவர் ஸ்டாலின்தான். எத்தனை தொகுதியில் எத்தனை பேர் வெற்றி பெற்றாலும் அத்தனை வெற்றியிலும் அவருடைய பங்கு உண்டு.

மன்னர் அலெக்சாண்டர் பல நாடுகளை வென்றார் என்றாலும், வென்ற ஒவ்வொரு நாட்டிலும் அவனுடைய பாதம் இருக்கும். அதுபோல, இந்தத் தேர்தலில் நாங்கள் வென்றுள்ளது எல்லாம் ஸ்டாலினுடைய முயற்சியால்தான். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஒரு புதிய ஆட்சி, ஒரு மறுமலர்ச்சி, ஒரு புதிய சிந்தனை, ஒரு புதிய லட்சியத்தோடு புறப்படப் போகிறது" என்றார்.

அதிமுக வேட்பாளர் பின்னணி:

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்தவர் ராமு (48). பொறியியல் பட்டதாரியான இவர், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக உள்ளார். வேலூர் மாவட்டத்தில் அதிக மக்கள்தொகை உள்ளா கொண்டசமுத்திரம் கிராம ஊராட்சியின் தலைவராக 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்துள்ளார்.

2015-16 வரை வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் தற்போது குடியாத்தம் ஒன்றியச் செயலாளராகவும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கே.வி.குப்பம் தொகுதி பொறுப்பாளராகவும் பணியாற்றியவர். மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகுபவர். காட்பாடி தொகுதியில் ஆள் பலம் இல்லாமல் சொந்த கட்சியினர் ஆதரவு குறைவாக இருந்தும் தனது பகுதி அதிமுக ஆட்களை வைத்து வேலை செய்தார்.

காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை அதிமுக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்துள்ள துரைமுருகன், 8-வது முறையாக வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x