Last Updated : 03 May, 2021 06:03 PM

 

Published : 03 May 2021 06:03 PM
Last Updated : 03 May 2021 06:03 PM

ராகுல் காந்தி வரை சென்று  போராடிப் பெற்ற மேலூரைக் கோட்டை விட்ட காங்கிரஸ்

பிரதிநிதித்துவப் படம்

மதுரை

ராகுல் காந்தி வரை சென்று போராடி வாங்கிய மேலூர் தொகுதியைத் தேர்தல் பணியைச் சரிவர மேற்கொள்ளாததால் காங்கிரஸ் கோட்டைவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் 6 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2001 முதல் 2016 வரை தொடர்ந்து 4 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பெரியபுள்ளான் என்ற செல்வம், இந்தத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டார்.

திமுக கூட்டணியில் மேலூரில் முதலில் திமுக போட்டியிடுவதாக இருந்தது. கடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஏ.பி.ரகுபதியை மீண்டும் வேட்பாளராக நிறுத்த திமுக திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மேலூரில் தனது சொந்த மாமனார் ரவிச்சந்திரனை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்து, ராகுல் காந்தி வரை பேசி மேலூர் தொகுதியை காங்கிரஸ் பெற்றது.

பாரம்பரியமாக காங்கிரஸுக்கு செல்வாக்கு உள்ள மேலூரில் காங்கிரஸ் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், தேர்தல் முடிவு வேறுவிதமாக இருந்தது. நேற்று (மே 03) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் என்ற செல்வம் 35 ஆயிரத்து 162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ரவிச்சந்திரன் தோல்வியடைந்தார். அவருக்கு 48 ஆயிரத்து 182 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 25 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 17, 18, 26 சுற்றுகளில் மட்டும் பெரியபுள்ளானை விட ரவிச்சந்திரன் கூடுதல் வாக்குகள் பெற்றார். மற்ற 22 சுற்றுகளிலும் பெரியபுள்ளான் முன்னிலை வகித்தார். தபால் வாக்குகளில் பெரியபுள்ளானை விட ரவிச்சந்திரன் 237 வாக்குகள் கூடுதலாக வாங்கியிருந்தார்.

தோல்வி அடைந்தது எப்படி?

காங்கிரஸ் வேட்பாளர் ரவிச்சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்ததோடு சரி. அதன் பிறகு, சரியாக பிரச்சாரம் செய்யவில்லை. கூட்டணிக் கட்சியினரை அரவணைத்துச் செல்லவில்லை. தேர்தல் செலவுக்குப் பணமும் கொடுக்கவில்லை. திமுகவினர் தங்கள் கட்சி மேலிடம் தேர்தல் செலவுக்காக அளித்த பணத்தை வைத்து தேர்தல் பணி மேற்கொண்டதால் இந்த அளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர் மந்தமாக இருப்பதை மாணிக்கம் தாகூரிடம் திமுகவினர் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸிடம் இருந்து திரும்பப்பெற்று, திமுக சார்பில் வேட்பாளரை நிறுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திமுக தலைமைக்கு திமுகவினர் அறிக்கை அனுப்பியுள்ளனர். இருப்பினும் தொகுதியை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. அதன் பிறகும் தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர் தீவிரம் காட்டாமல் இருந்துள்ளார். இதனால் ராகுல் காந்தி வரை சென்று போராடிப் பெற்ற மேலூர் தொகுதியை காங்கிரஸ் கோட்டைவிட்டுள்ளது.

அதே நேரத்தில், அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போகும்போது, பல இடங்களில் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதைச் சமாளிக்க முடியாமல் அவர் திணறி வந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரின் சுணக்கம், முத்தரையர் வாக்கு வங்கி, தொகுதியைச் சேர்ந்தவர் போன்ற காரணங்களால் மேலூர் தொகுதியைப் பெரியபுள்ளான் 2-வது முறையாகத் தக்கவைத்துக் கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x