Published : 03 May 2021 05:07 PM
Last Updated : 03 May 2021 05:07 PM

திருவண்ணாமலையில் எ.வ.வேலு 'ஹாட்ரிக்' வெற்றி; சட்டப்பேரவைக்குள் 6-வது முறையாக நுழைகிறார்

எ.வ.வேலுவுக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கிய மாவட்டத் தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிவேல்.

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுகவில் அரசியல் பயணத்தைத் தொடங்கிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திமுகவில் அசைக்க முடியாத சக்திகளில் ஒன்றாக வலம் வருகிறார். 1984-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிக் கணக்கைத் தொடங்கினார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி சார்பில், 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். பின்னர், பிளவுபட்டிருந்த அதிமுக ஒன்றானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக செயல்பட்டபோது, ஜானகி அணியில் இருந்தவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அதில், எ.வ.வேலுவும் தப்பவில்லை. இதனால், 1991-ல் நடைபெற்ற தேர்தலில் புறக்கணிக்கப்பட்டார்.

இதையடுத்து தனது எதிர்கால அரசியலைக் கணக்கிட்டு, திமுகவில் இணைந்த அவர், தண்டராம்பட்டு தொகுதியில் 2001 மற்றும் 2006-ம் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு அதிமுகவை வீழ்த்தினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராகத் திகழ்ந்த எ.வ.வேலு, திமுக அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அதன்பிறகு, அவரது அரசியல் செல்வாக்கு 'கிடுகிடு'வென உயர்ந்தது.

இந்த நிலையில், தொகுதி சீரமைப்புக்குப் பிறகு, திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 2016-ல் நடைபெற்ற தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வீழ்த்தினார். இதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 3-வது முறையாகக் களம் கண்டவர், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜகவை 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 'ஹாட்ரிக்' வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில், 2-வது இடத்தில் உள்ள எ.வ.வேலு, புதிய அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர், தமிழக சட்டப்பேரவைக்குள் 6-வது முறையாக நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x