Last Updated : 03 May, 2021 02:55 PM

 

Published : 03 May 2021 02:55 PM
Last Updated : 03 May 2021 02:55 PM

தேசியத் தலைவர்கள் தொடர்ந்து முகாமிட்டும் காரைக்காலில் தாமரை மலரவில்லை

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் பாஜக தேசியத் தலைவர்கள் தொடர்ந்து முகாமிட்டும் தாமரை மலராத நிலை ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகத் தீவிரமாக கவனம் செலுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கியத் தலைவர்கள் புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். பாஜகவின் தேசியப் பொறுப்பில் உள்ளவர்கள் புதுச்சேரியிலேயே தங்கியிருந்து தீவிரமாக தேர்தல் வியூகங்களை வகுத்து வந்தனர்.

புதுச்சேரிக்கு அடுத்து பெரிய பிராந்தியமாக, 5 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள காரைக்கால் மாவட்டத்திலும் பாஜக தீவிர கவனம் செலுத்தியது. 5 தொகுதிகளில் திருநள்ளாறு, நிரவி-திருப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகளை பாஜகவுக்காக கூட்டணியில் கேட்டுப் பெற்றது.

இத்தொகுதிகளில் பாஜக சார்பில் வலுவான வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அண்மையில் கட்சியில் இணைந்த தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் திருநள்ளாறு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சுயேச்சையாகப் போட்டியிட திட்டமிட்டிருந்த, முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமாரின் மகன் வி.எம்.சி.எஸ்.மனோகரனை காலையில் கட்சியில் சேர்த்து, மாலையில் நிரவி-திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவித்தனர்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் காரைக்கால் பகுதிக்கு வந்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மேலும், மத்திய இணை அமைச்சரும், புதுச்சேரி மாநிலத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜுன் ராம் மேக்வால், புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, மாநிலங்களவை உறுப்பினரும், தேர்தல் இணை பொறுப்பாளருமான ராஜிவ் சந்திரசேகர், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் நினைத்த மாத்திரத்தில் ஹெலிகாப்டர் மூலமும், வாகனம் மூலமும் அடிக்கடி காரைக்கால் பகுதிக்கு வந்து முகாமிட்டுப் பிரச்சாரம் மேற்கொள்வது, கட்சியில் முக்கிய பிரமுகர்களைச் சேர்ப்பது, வெற்றிக்கான வியூகங்களை மேற்கொள்வது போன்ற தேர்தல் களப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

காரைக்காலில் மற்ற எந்தக் கட்சியை விடவும் பாஜக மட்டுமே தொடக்கத்திலிருந்து இறுதிவரை தேர்தல் பணிகளை மிக விறுவிறுப்பாக மேற்கொண்டு வந்தது.

இதனிடையே திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், ரூ.2 ஆயிரம் ரொக்கமும் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் வைக்கப்பட்டிருந்த 149 தங்கக் காசுகளும், ரூ.90, 500 ரொக்கமும் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் 2 தொகுதிகளிலும் பாஜக தோல்வியுற்றது. பாஜக கூட்டணியில், திருநள்ளாறு தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாததால் அதிருப்தியடைந்து, அத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா வெற்றி பெற்றார். நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.நாக தியாகராஜன் வெற்றி பெற்றார்.

தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் காரைக்காலில் தாமாரை மலர இயலாமல் போனது அக்கட்சியினரிடையே பெருத்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x