

பாஜக 4 தொகுதிகளில் பெற்ற வெற்றியைப் பொருட்படுத்தத் தேவையில்லை என, திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். வரும் 7ஆம் தேதி அவர் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். அதிமுக ஆட்சியை இழந்தாலும் 65 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் எதிர்க்கட்சியாக அமர்கிறது.
இந்நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று (மே 03) ஒவ்வொருவராகச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விசிக தலைவரும், மக்களவை உறுபினருமான திருமாவளவன், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின், திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"புதுச்சேரி, அசாமைத் தவிர தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் மரண அடியைக் கொடுத்திருக்கின்றனர். அவர்களின் மதவாத, வெறுப்பு அரசியல், சதி முயற்சிகள் இந்த 3 மாநிலங்களில் எடுபடவில்லை. மக்கள் அவர்களை மண்ணைக் கவ்வ வைத்திருக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இமாலய வெற்றி பெற்றிருக்கிறார். அவரை வீழ்த்திவிட்டு, ஆட்சிக்கு வர பல்வேறு பகீரத முயற்சிகளை மேற்கொண்ட பாஜக படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார்.
கேரளாவில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவுக்கு மக்கள் பாஜகவைப் புறக்கணித்திருக்கின்றனர்.
தமிழகத்தில் அதிமுக, பாமக முதுகில் ஏறி சவாரி செய்து, பெரிய சக்தியாக வளர வேண்டும் என கணக்குப்போட்ட பாஜக படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. தமிழ்நாடு சமூக நீதி மண், பெரியார் மண் என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட மக்களையும், பட்டியல் மக்களையும் பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேட முயன்ற பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் பாடம் புகட்டியிருக்கின்றனர்.
6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, பொருளாதார வலிமையின்றி, 4 தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். அதில், 2 பொதுத் தொகுதியில் போட்டியிட்டோம். இரண்டிலும் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.
இது விசிக முன்மொழிந்த அரசியல் நிலைப்பாடுகளுக்கு மக்கள் அளித்த மாபெரும் அங்கீகாரம். விசிகவின் உழைப்புக்கு மக்கள் அளித்த அங்கீகாரம். அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அரசியல் இயக்கமாக விசிக பரிணமித்திருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட சாதி முத்திரையைக் குத்தி விசிகவை ஓரம்கட்டிவிட நினைத்த சாதிய, மதவாத கும்பலுக்குப் பாடம் புகட்டி எங்களுக்கு வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினின் வியூகம் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தி வரும் ஸ்டாலின், கூட்டணியைச் சிதறவிடாமல் வழிநடத்தி வெற்றியை ஈட்டுத் தந்திருக்கிறார்.
ஆறாவது முறையாக திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறது. மிகப்பெரிய அறுதிப் பெரும்பான்மையுடன், திமுக மட்டுமே 128 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. கருணாநிதியைப் போல் ராஜதந்திரம் மிக்கவர், ஆளுமை மிக்கவர் என்பதை இந்தத் தேர்தல் வெற்றி மூலம் ஸ்டாலின் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதே என் லட்சியம் என அவர் பிரகடனப்படுத்தியிருக்கிறார். கடந்த காலத்தில் அமைந்த ஊழல் அரசைப் போல் அல்லாமல், நல்லாட்சியை வழங்கும் வலிமை அவருக்கு உண்டு என்பதை விசிக நம்புகிறது.
கரோனா நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஸ்டாலின் சந்திக்கவுள்ள பெரிய சவாலாக கரோனா இருக்கிறது. அவர் மிகச்சிறந்த ஆட்சியை வழங்க விசிக ஒத்துழைப்பை நல்கும்.
பாஜக 4 தொகுதிகளில் பெற்ற வெற்றி, பொருட்டாக மதிக்கக்கூடிய வெற்றி அல்ல, அது புறக்கணிக்கப்படக்கூடிய வெற்றிதான். பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி என்பதைவிட அது அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றிதான். அதிமுகவும் பாஜகவும் வேறு வேறு அல்ல. அவர்கள் கிட்டத்தட்ட ஒரே தன்மையைக் கொண்ட சக்திகளாக மாறியிருக்கிறார்கள். ஆனாலும், அவர்களால் தமிழக அரசியலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.