Published : 03 May 2021 12:54 PM
Last Updated : 03 May 2021 12:54 PM

எதிர்க்கட்சி என்னும் பொறுப்புடன் மனத் தூய்மையுடன் பணியாற்றுவோம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ்

ஈபிஎஸ் - ஓபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

எதிர்க்கட்சி என்னும் பெரும் பொறுப்புடன் அதிமுகவின் கொள்கை வழி நின்று பணியாற்றுவோம் என, ஓபிஎஸ் - ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (மே 03) கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

"தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், தங்களது வாக்குகளை அளித்துள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் எங்களது இதயமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து 10 ஆண்டு காலம் நடைபெற்ற அதிமுக அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஆற்றி இருக்கும் அரும் பணிகளை மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித்தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாகவும் செயல்பட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையிலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி என்னும் பெரும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் மனத் தூய்மையுடனும், அதிமுகவின் கொள்கை வழி நின்றும் செவ்வனே நிறைவேற்றுவோம்.

நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில், அதிமுகவின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு, பகல் பாராது அரும்பணியாற்றிய அதிமுக நிர்வாகிகளுக்கும், அதிமுக உடன்பிறப்புகளுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு, ஆல்போல் வேரூன்றி இருக்கும் அதிமுக தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றுவதற்கும், அதிமுகவைக் கட்டிக் காக்கும் கடமையில் தோளோடு, தோள் நின்று உழைப்பதற்கும், அதிமுக உடன்பிறப்புகள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x