ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 

ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 
Updated on
1 min read

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார்.

சட்டப்பேரவை தேர்தல் ஏப் 6 அன்று நடந்தது, மே 2 வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றது. திமுக 125 இடங்களைப்பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பது உறுதியானது.

இன்று காலை பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ள நிகழ்ச்சி எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பேன் எனத் தெரிவித்திருந்தார். ஆட்சி அமைக்க உரிமை கோரும்முன் முதலில் திமுக சார்பில் வெற்றிப்பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி சின்னத்தில் வென்றவர்கள் கூட்டத்தை கூட்டி அவர்கள் ஆதரவை ஸ்டாலின் பெற வேண்டும்.

பின்னர் தனக்கு ஆதரவளித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உரிமை கோர வேண்டும். அதன் அடிப்படையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடக்க உள்ளது. இதில் வெற்றிப்பெற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பர்.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 4.5.2021 செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.

அதுபோது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார். இந்தக்கூட்டத்தின் பொருள் திமுக சட்டமன்ற தலைவர், கொறடா உள்ளிட்டோர் தேர்வாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in