

தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவுக்கும் அதன் தலைவர் முக ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பூ, நல்ல பணி தொடர வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 158 தொகுதிகளில் வென்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
திமுகவின் வேட்பாளர் டாக்டர் எழிலனை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட நடிகை குஷ்பூ (பாஜக) தோல்வியடைந்தார். இதன் பின் தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பூ, ”ஒவ்வொரு வெற்றியும் தோல்வியோடுதான் ஆரம்பமாகிறது. மக்களின் தீர்ப்பை அடக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் எழிலன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
எது எப்படியோ, நான் தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன். அவர்களுடன் நிற்பேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். கடைசியில் மக்கள் தான் முடிவு செய்கிறார்கள். அவர்கள் முடிவு பணிவோடு ஏற்கப்பட்டது” என்று ட்வீட் செய்துள்ளார்.
இதன் பிறகு திமுகவின் ட்விட்டர் பக்கத்தையும், முக ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தையும் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள குஷ்பூ, "நாம் ஒற்றுமையோடு நிற்போம். அழகிய மாநிலமான தமிழ்நாட்டை இன்னும் சிறப்பானதாக்க வரப்போகும் புதிய அரசுக்கு உதவுவோம். திமுக மற்றும் அதன் தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தை தனது வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் முன்னெடுத்துச்ச்செல்வார் என்று நான் நம்புகிறேன். தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.