

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி அதிமுகவின் வாக்கு வங்கிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
தமிழக அரசியலில் அதிமுகவும், அமமுகவும் மோதல்போக்கை கடைபிடிக்கின்றன. குறிப்பாக, 2019 மக்களவைத் தேர்தலின்போது, அதிமுகவின் தோல்விக்கு அமமுகவும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. இதேபோல, 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு, அமமுக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.
மற்றொருபுறம், கூடுதல் இடங்கள் ஒதுக்காததால் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிகவை, அமமுக கூட்டணிக்கு அழைத்து, 60 இடங்களும் ஒதுக்கியது. இக்கூட்டணி அதிமுகவின் வாக்கு வங்கியை பாதிக்குமோ? என்று அதிமுகவினரிடையே பயத்தை ஏற்படுத்தியது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுகவுக்கு எதிராக அமமுக - தேமுதிக கூட்டணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டன.
தென் மாவட்டங்களில்...
இயல்பாகவே தென் மாவட்டங்களில் சமூக ரீதியான வாக்குகளின் ஆதரவால் அமமுகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்று கூறப்பட்ட நிலையில், அமமுக - தேமுதிக கூட்டணி தென் மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், தென் மாவட்டங்களில் 73 தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகளைப் பிரித்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்துவோம் என அமமுகவினர் கூறிவந்தனர்.
ஆனால், வாக்கு எண்ணிக்கை யும், தேர்தல் முடிவுகளும் இந்தக் கணிப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கியுள்ளது.
அமமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பெரிய அளவுக்கு அதிமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்கவில்லை. இது அதிமுகவினருக்கு உற்சா கத்தையும், அமமுகவினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது.
அமமுக - தேமுதிக வேட்பாளர் கள் குறைந்த அளவிலேயே வாக்குகளை பெற்றனர். தமிழகத் தில் அமமுக எங்கும் முன்னிலை வகிக்கவில்லை.
12 தொகுதிகளில்..
இருப்பினும், ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, மன்னார்குடி,காரைக்குடி, மானாமதுரை, திருவாடானை, முதுகுளத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், நாங்குநேரி, மயிலாடுதுறை ஆகிய12 தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் வாக்குகளை பிரித்தது, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளன.
கோவில்பட்டி தொகுதியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு எதிராக டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வந்தார். அஞ்சல் வாக்குகளில் முன்னிலை வகித்த தினகரன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் பின்னடைவை சந்தித்தார். அமமுக மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அந்தக் கட்சி பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலரான டிடிவி தினகரன்கூட இந்த தேர்தலில் வெற்றி பெறாதது அக்கட்சியினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக ட்விட்டரில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.