Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் - திமுகவினர் உற்சாகம்; களைகட்டியது அறிவாலயம்

திமுக தலைமை அலுவலகமானஅண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும்,இனிப்பு வழங்கியும், ஆட்டம்,பாட்டத்துடன் தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நேற்று வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். 150-க்கும்மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை என தகவல்கள் வெளியானதும், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் குவிந்தபடி இருந்தனர்.

கரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் வெற்றியைக் கொண்டாட வேண்டாம் என்று இந்திய தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்ததால், அறிவாலயத்தின் நுழைவுவாயில்கள் நேற்று காலை மூடப்பட்டிருந்தன.

அறிவாலய கதவுகள் திறப்பு

ஆனால், அதிக அளவிலான தொண்டர்கள் குவிந்ததால்,அறிவாலயத்தின் நுழைவுவாயில்கள் 12 மணி அளவில் திறந்துவிடப்பட்டன. அறிவாலய வளாகத்துக்குள் திமுகவினர் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ஆடல், பாடலுடன் அறிவாலயம் களைகட்டியது. பலரும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்களை ஏந்தியபடி சக தொண்டர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

கூட்டம் அதிகம் கூடியதால், ‘அறிவாலய வளாகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம். கூட்டம் கூட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்’ என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. தொண்டர்கள் அமைதியாக வீட்டுக்குச் சென்று அங்கு வெற்றியைக் கொண்டாடுமாறு அறிவாலய காவலர்களும் கேட்டுக் கொண்டனர்.பின்னர், அண்ணா அறிவாலய நுழைவுவாயில்கள் மீண்டும் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டன. தொடர்ந்து வந்த தொண்டர்களை காவலர்கள் திருப்பி அனுப்பியபடி இருந்தனர்.

ஆய்வாளர் இடைநீக்கம்

இதற்கிடையில், தகவல் அறிந்து வந்த தேனாம்பேட்டை போலீஸார், தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது

ஏற்கெனவே உரிய உத்தரவுகள் பிறப்பித்தும், வெற்றி கொண்டாட்டத்தை தடுக்க தவறி, பணியில் கவனக் குறைவாக இருந்ததாக தேனாம்பேட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் முரளியை பணி இடைநீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைய பரிந்துரையின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x