

திருச்சி கிழக்குத் தொகுதியில் மாலை 5 மணியளவில் 19 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்திருந்த நிலையில், அனைத்துச் சுற்றிலும் புதுமுக திமுக வேட்பாளரைவிடப் பின்தங்கியே வருகிறார் அதிமுக வேட்பாளரும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன்.
கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட என்.நடராஜன் 79,938 வாக்குகளும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெரோம் ஆரோக்கியராஜ் 58,044 வாக்குகளும் பெற்றனர். முதல் முறையாகக் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற வெல்லமண்டி என்.நடராஜன், மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஆனார்.
அதைத் தொடர்ந்து, மீண்டும் இதே தொகுதியில் அவர் களமிறங்கிய நிலையில், திமுக சார்பில் சென்னையைச் சேர்ந்தவரும் திருச்சி திமுகவினருக்குப் புதுமுகமும் ஆன எஸ்.இனிகோ இருதயராஜை எளிதாக வெல்வார் என்று அதிமுகவினர் உறுதிபடத் தெரிவித்து வந்தனர்.
ஆனால், வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளரைவிடப் பின்தங்கியே வருகிறார் வெல்லமண்டி என்.நடராஜன். மாலை 5 மணியளவில் 19 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்திருந்த நிலையில், திமுக வேட்பாளர் எஸ்.இனிகோ இருதயராஜ் 67,200 வாக்குகளும், அதிமுக வேட்பாளரான அமைச்சர் என்.நடராஜன் 31,525 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்படி, 19 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் எஸ்.இனிகோ இருதயராஜ் 35,675 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில் உள்ளார்.