அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியிலும் வெல்லாத தமாகா: ஜி.கே.வாசனுக்குத் தொடரும் பின்னடைவு

அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியிலும் வெல்லாத தமாகா: ஜி.கே.வாசனுக்குத் தொடரும் பின்னடைவு
Updated on
1 min read

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா 6 தொகுதிகளில் போட்டியிட்டாலும் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாத சோக நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் ஜி.கே.வாசனுக்கு ஏற்பட்ட முதல் சறுக்கல், தற்போது அதிமுக கூட்டணியிலும் தொடர்கிறது.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார் 1996-ல் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதை மேலிடம் ஏற்காததால் வெளியில் வந்து தமாகா எனும் கட்சியைத் தொடங்கினார். அப்போது திமுகவுடன் தமாகா போட்டியிட்டு, 39 இடங்களை வென்றது.

அந்த நேரத்தில் மூப்பனாருக்கு உதவியாக இயங்கிய இளைஞர் அரசல் புரசலாக அரசியல் களத்தில் அறியப்பட்டார். அவர்தான் ஜி.கே.வாசன். ஐந்தாண்டில் திமுகவுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேசினார் மூப்பனார். அப்போது அந்த சுறுசுறுப்பான அமைதியான இளைஞரை விசாரித்த ஜெயலலிதா, இன்னும் அவரை அரசியலில் இறக்காமல் இருக்கிறீர்களே எனக் கேட்டதாகக் கூறுவார்கள்.

அதன் பின்னர் நேரடி அரசியலுக்கு வந்தார் ஜி.கே.வாசன். மூப்பனார் மறைவுக்குப் பின் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தமிழகத்தில் வலுவாக இருந்த தமாகாவை வழிநடத்திச் சென்றார். 2002இல் மீண்டும் காங்கிரஸில் தமாகாவை இணைத்தார்.

2014 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் காங்கிரஸிலிருந்து பிரிந்து மீண்டும் தமாகாவைத் தொடங்கினார் வாசன். தமாகாவுக்கென்று வாக்கு வங்கி இருந்தது. 2016இல் தமாகாவுக்கு 12 இடங்கள் வரை தர முன் வந்த ஜெயலலிதா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு வாசனைக் கேட்டுக்கொண்டார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த வாசன், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்ததால் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். மக்கள் நலக் கூட்டணி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த படுதோல்வி தமாகாவை பாதித்தது. பின்னர் கூட்டணியிலிருந்து விலகி தனியாகக் கட்சி நடத்தி வந்தார்.

சில ஆண்டுகளாக அதிமுகவுடன் நெருக்கமாக இருந்தார். ஆனாலும், இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாசன் கேட்ட 12 தொகுதிகளைத் தராமல் 6 தொகுதிகளை ஒதுக்கி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட சொன்னதை ஏற்றுப் போட்டியிட்டார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக கட்சிகள் தம் வெற்றிக் கணக்கைத் தொடங்கியபோதும் ஏனோ தமாகாவால் மட்டும் அது முடியாமல் போனது. தொடர் பின்னடைவு, ஜி.கே.வாசன் அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் நேரம் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in