Published : 02 May 2021 04:37 PM
Last Updated : 02 May 2021 04:37 PM

அண்ணா அறிவாலயத்தில் கூடிய தொண்டர்கள்: தடுக்கத் தவறிய தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

கோப்புப்படம்

சென்னை

திமுக வெற்றியைக் கொண்டாட அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கூடினர். தொற்றுப் பரவல் ஏற்படும் என்ற நிலையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தத் தவறிய தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தேர்தல் பிரச்சார நேரத்தில் கரோனா 2-வது அலை பெரிதாகப் பரவியது. வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், மறுநாள் முதல் கடும் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. தமிழகத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்றுப் பரவல் 19 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு, கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து உயர் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. வாக்கு எண்ணிக்கையில் முகவர்களை அனுமதிப்பதில் தொடங்கி வெற்றிக் கொண்டாட்டங்கள் எதையும் அனுஷ்டிக்கக் கூடாது, கும்பல் சேரக்கூடாது, கொண்டாட்டத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கூடினர். திமுக கூட்டணி முன்னிலை வகித்ததால் சந்தோஷமடைந்த அவர்கள் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தனர். நேரம் செல்லச் செல்ல கூட்டமும் அதிகரித்தது.

இதை சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் முரளி கண்டுகொள்ளாமல் விட்டதால் அவரைத் தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டதை அடுத்து, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மேலும், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக தொண்டர்கள் மீது போலீஸார் ஐபிசி செக்‌ஷன் 143 (பொது இடத்தில் 144 உத்தரவை மீறி அனுமதி இன்றிக் கூடுதலுக்காக தண்டனை), 188 (144 தடையுத்தரவை மீறி அதிகாரிகள் உத்தரவை மீறியது), 285 (பொது இடத்தில் அடுத்தவர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வண்ணம் பட்டாசு, வெடி பொருட்களை உபயோகிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x