

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுக, அமமுகவினர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகரில் உள்ள ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது.
சாத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் பார்வையிட வந்தார்.
அதன் பின்னர் சாத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் ராஜவர்தன் வாக்கு எண்ணிக்கை அறைக்குள் வந்தபோது அதிமுகவினர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் அதிமுக சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முககனி, அமமுக நிர்வாகி திருமலை ராஜன் ஆகியோர் தாக்கப்பட்டனர். இதனால் அந்த அறையில் பரபரப்பு ஏற்பட்டது.
மோதல் காரணமாக அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
மோதலில் ஈடுபட்டவர்கள் இடையே அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.