

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஒரு சுற்றுக்கு 500 தபால் வாக்குகள் எண்ணப்படும். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 3,30,380 தபால் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக மூத்த குடிமக்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்குகள் பதிவு செய்ய வாய்ப்பளித்ததன் காரணமாக கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் இருந்து நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு பதில் மாற்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொற்று காரணமாகத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 6 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய மூன்று மையங்களில் எண்ணப்படுகின்றன. இந்த மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் நான்கடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகள் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்தவக் கல்லூரியில் எண்ணப்படவுள்ளன.
சென்னை பெருநகரக் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட இந்த நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 3000 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாள் என்பதால் ஊரடங்கு கண்காணிப்பில் 7000 காவலர்கள் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டவுடன் தொடர்ந்து தொகுதிவாரியாக அந்தந்தந்த மையங்களில் தனித்தனியாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
காலை 11 மணிக்குத் தமிழகம் முழுவதும் முதல் சுற்றில் யார் முன்னணி என்கிற தகவல் வரத் தொடங்கிவிடும். யாருக்கு வெற்றி யார் முதலிடம், யார் இரண்டாம் இடம் என்பது குறித்த கள நிலவரங்கள் வரத் தொடங்கிவிடும். முழுமையான தேர்தல் முடிவுகள் வர இரவு ஆகிவிடும் என்றாலும் மதியத்துக்கு மேல் யார் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு என்பதற்கான ஒரு வடிவம் கிடைக்க வாய்ப்புள்ளது.