Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூருக்கு புதிய பெட்டிகளுடன் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்ட மலை ரயில்.

கோவை

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் இருந்து குன்னூர் வழியே உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது. கரோனா 2-ம் அலையின் காரணமாக கடந்த ஏப்.21ல் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இருப்பினும், மலை ரயிலை நவீனப்படுத்தும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அண்மையில், பெரம்பூர் ரயில் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) புதியபெட்டிகள் தயாரிக்கப்பட்டு, அவை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. பயணத்தின்போது, இயற்கை அழகை சுற்றுலாபயணிகள் முழுமையாக கண்டுரசிக்கும் வகையில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள், குஷன் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பழைய 2-ம் வகுப்பு பெட்டிகளில் 56 இருக்கைகள் இருந்த நிலையில், தற்போது 44-ஆககுறைக்கப்பட்டுள்ளன. இதனால் இருக்கைகளுக்கு இடையே கால் வைக்கும் இடத்தில் நிலவிய நெருக்கடி தவிர்க்கப்பட்டுள்ளது. கரோனா தாக்கம் குறைந்து, மீண்டும் மலைரயிலை இயக்கும்போது, இந்தப் பெட்டிகளையும் இணைத்து இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘புதிதாக வடிவமைக்கப்பட்ட 4 பெட்டிகளில் மொத்தம் 150 பேர் பயணிக்கலாம். புதிய பெட்டிகளுடன், மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஆட்கள் அமரும் இருக்கைகளில் ஒரு நபருக்கு 75 கிலோ என்ற கணக்கில் எடை வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம்-குன்னூர், குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தில் புதிய பெட்டிகளின் சக்கரங்கள் செங்குத் தான மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பல்சக்கர இருப்புப் பாதையில் சரிவர பொருந்துகிறதா என சோதிக்கப்பட்டது. சோதனையின்போது தெரியவந்த குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு, இந்த பெட்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.

புதிய ரயில் பெட்டிகள் சோதனை ஓட்டம் 52 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடத்தப்பட்டது. இதுவரை 28 புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பகுதி பகுதியாக சோதனை நடத்தப்பட்டு, புதிய ரயில் பெட்டிகள் அனைத்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x