

தேர்தல் முடிவுகளை கேட்டு வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் உடனே கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல்வாக்கு எண்ணிக்கை இன்றுநடக்கிறது. 88,937 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள்75 மையங்களில் எண்ணப்படுகின்றன. இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா கட்டுப்பாடுகள்
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன், பேனா, வாட்டர் பாட்டில், சாப்பாடு உள்ளிட்ட எந்த பொருளையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேற்று நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
“கரோனா முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனால் வீட்டைவிட்டு யாரும் வெளியே வர வேண்டாம். வாக்குஎண்ணும் மையத்துக்கு வெளியேபோலீஸார் தவிர மற்றவர்கள் வருவதற்குகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பிரச்சினை செய்யும் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிவுகளைக் கேட்டு அரசியல் கட்சியினர் உட்பட யாராவது வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையில் ஈடுபடும் நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.