

பல்லாவரம், தாம்பரம் பகுதியில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்த மருத்துவர்கள், ஒரு மருந்து கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து சிபிசிஐடி எஸ்.பி. சாந்தி தலைமையில் போலீஸார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் தாம்பரத்தில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்தமருத்துவர் முகம்மது இம்ரான் கான், அவரது கூட்டாளிகளான விஜய், விகேனேஷ், ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜான்கிங்லி (41), மருந்து கடை உரிமையாளர் பெருமாள் (30) ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 11 டோஸ் ரெம்டெசிவிர் மருந்து கைப்பற்றப்பட்டது. மருந்தை ரூ.11,500-க்கு விற்பனை செய்ததாக அவர்கள் ஒப்பு கொண்டதை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ரூ.22,000-க்கு விற்பனை
தாம்பரம் செம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் தீபன்(28). இவர் கரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை குறைந்த விலைக்கு வாங்கி அதிகபட்ச விலையாக ரூ.22,000-க்குவிற்க முயன்றார். மேடவாக்கத்தில், காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான போலீஸார் இவரைக் கைது செய்தனர். இவரிடமிருந்து 6 ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விசாரணையில் மருந்தகத்தில் பணிபுரியும் நரேந்திரன்(22) என்பவரிடம் இருந்து, ரூ.19,000-க்குவாங்கியது தெரியவந்தது. அதனடிப்படையில் நரேந்திரனும் கைது செய்யப்பட்டார்.
கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்க வேண்டும் எனில் அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையைத் தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.