

வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் அனைத்துக் கட்சிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டு இருப்பதால், வாக்கு எண்ணிக்கை முகாம்களில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் தெரிந்தவுடன் வெற்றிக் கொண்டாட்டங்கள் இருக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்யாமல் அனைத்துக் கட்சிகளும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் முறைப்படி அறிவிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தற்போது கரோனா பரவலால் மக்கள் அச்சமடைந்துள்ள நேரத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்ற உற்சாகம், எந்தவிதத்திலும் கரோனா பரவலுக்கு காரணமாகிவிடக் கூடாது.
எனவே, தேர்தல் ஆணையமும், மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.