Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கப் போவது யார்? - உச்சகட்ட எதிர்பார்ப்பில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள்

புதுச்சேரியில் ஆட்சியை அமைக்கப் போவது யார்? புதிய முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உச்சக்கட்டத்தை எட்டிஉள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், திமுக, இந்தியகம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும், என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த இரு அணிகளுக்கு இடையில் நேரடி போட்டிநிலவியது. இது தவிர மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர், அமமுக,தேமுதிக உள்ளிட்ட கட்களின் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதன் காரணமாக சுயேச்சைகளையும் சேர்த்து 324 வேட்பளர்கள் தேர்தலை சந்தித்தனர். இத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக செயல்பட்டது. இதற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நிதின் கட்கரி, அர்ஜூன்ராம்மெக்வால், பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் புதுச்சேரியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மோசமான ஆட்சி நடந்தது, மக்களுக்கான நலத் திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லை என்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் தரப்பில் மேலிட தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, வீரப்ப மொய்லி, தினேஷ் குண்டுராவ், சஞ்சய்தத், பல்லம் ராஜூ உள்ளிட்ட பலர் பிரச்சாரம் செய்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரோடியர் மில் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் மத்திய பாஜக அரசை தாக்கி பிரச்சாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் தரப்பில் மத்திய பாஜக அரசின் பாராமுகம், ஆளுநரின் தடைகளை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்தனர். தடைகளை மீறி 85 சதவீத நலத் திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பிரச்சார உத்திகள்

பாஜக தரப்பில் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் புதுச்சேரி வளர்ச்சி பெறும். பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்குவோம் என கோஷத்தையும் முன்வைத்தனர். புதுச்சேரி மக்கள் அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு ‘உங்கள் கோரிக்கை, எங்கள் வாக்குறுதி’ என தேர்தல் அறிக்கையை பாஜக தயாரித்து வெளியிட்டது. இரு தரப்பும் மக்களை கவரும் வகையில் பல்வேறு பிரச்சார உத்திகளை கையாண்டனர்.

மீண்டும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸூம், புதிதாக ஆட்சியை அமைக்க பாஜகவும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இருதரப்பிலும் முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ், திமுக கூட்டணியில் யார் அதிக இடங்களில் வெற்றிபெறுகிறார்களோ? அந்த கட்சிக்கே முதல்வர் பதவி கிடைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

அதேநேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள் ஒன்றுகூடி முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தெரிவித்துள்ளார்.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களில் யார் வெற்றி பெறுவார்? புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? புதிய முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x