

கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றை, மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றி, அழகிய பூந்தோட்டத்தை வளர்த்தெடுத்து வருகின்றனர் திருப்பூர் பள்ளி மாணவர்கள்.
திருப்பூர் - காங்கயம் சாலை முதலிபாளையம் பிரிவு அருகே பெம் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் ஆயிரத்து 100 அடி குழி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதையடுத்து, கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றை, மழை நீர் சேகரிப்புத் தொட்டியாக வடிவமைத்து, பள்ளி மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, “ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வரவில்லை என்றால், தரைமட்டத்தில் இருந்து பூமிக்குள் இறக்கப்பட்ட பி.வி.சி. குழாயை வெளியே எடுத்துவிடுகின்றனர். இதனால், தரைமட்ட குழாய் பகுதி விரிவடைந்து, குழந்தைகள் உள்ளே விழுந்து உயிரிழக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. எனவே, பிவிசி குழாயை வெளியே எடுக்கக்கூடாது. மாறாக, கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றை அப்படியே விட்டுவிட்டு, தரைமட்டத்தில் இருந்து 1 அல்லது 2 அடி உயரம் விட்டு, அதன் மீது கப்லிங்க் போட்டு மூடிவிட்டோம். பி.வி.சி. பைப்பில் சிறிய துவாரங்கள் அமைத்து, அதைச் சுற்றி கூழாங்கற்களை போட்டு மழை நீர் சேகரிக்கும் மையமாக மாற்றினோம்.
இதன்மூலமாக, ஆழ்துளை கிணற்றுக்கு மழை நீர் சென்று, நிலத்தடியில் சேகரமானது. தற்போது 37 அடியில் கிடைக்கும் தண்ணீரை பாய்ச்சி பள்ளியின் மரம், செடி, கொடி பூங்காவை பராமரித்து வருகிறோம்” என்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “ஆழ்துளை கிணறு, மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாறிய சில மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாதுகாப்பான முறையில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தக்கூடிய இந்த முறையை, ஒரு மாற்று ஆலோசனையாக அரசு எடுத்துக்கொள்ளலாம். இதனால், குழந்தைகள் உயிரிழப்பும் தடுக்கப்படும்” என்றார்.
(பள்ளி முகப்பிலுள்ள பூங்காவுக்கு ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சும் மாணவர்கள். படம்: இரா.கார்த்திகேயன்)
பள்ளி முதல்வர் கவுசல்யா ராஜன் கூறும்போது, “தேசிய கல்வி நாளை ஒட்டி, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் நடத்திய ஆய்வறிக்கைப் போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து 17 ஆயிரத்துக்கும் மேலான பள்ளிகள் பங்கேற்றன.
மாணவர்களின் இந்த முயற்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. வரும் 22-ம் தேதி டெல்லியில் உள்ள சி.பி.எஸ்.இ. மத்திய அலுவலகத்தில் நடைபெறும் போட்டியில், 20 பள்ளிகள் மட்டுமே பங்கேற்கின்றன. அதில், பள்ளி ஆசிரியர் பாலமுரளி, ஆய்வறிக்கை மாணவர் விஷ்வா ஆகியோர் பங்கேற்கின்றனர்” என்றார்.