

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு பெரும் சவால்கள் உள்ளன என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக மக்கள் எண்ணங்கள் படியே கருத்துக் கணிப்புகள் உள்ளன. கருத்துக் கணிப்புகள் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. கருத்துகணிப்பு நடத்தியவர்களுக்கு நன்றி.
தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை என்ற கேள்வியே எழவில்லை.
கரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டன. இதில் மத்திய அரசுக்கு பெரும்பங்கு உள்ளது. மத்திய அரசை பலமுறை நாங்கள் எச்சரித்தோம். எந்த எச்சரிக்கையையும், யோசனையையும் ஏற்கவில்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதத்திற்கு, கடிதம் வந்து சேர்ந்தது, பரிசீலிக்கிறேன் என்று கூட இன்னாள் பிரதமர் பதில் தரவில்லை. அதைவிட்டு விட்டு அமைச்சர் மூலம் பதில் சொல்ல வைக்கிறார்.
மே 1-ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்கள். ஆனால் தற்போது தடுப்பூசி இல்லை. தடுப்பூசி இல்லாமல் தடுப்பூசி இயக்கம் எப்படி நடத்த முடியும்.
மேலும் காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளை தான் தற்போது உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பதில் சொல்லவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு பதில் சொல்வார்கள் என நம்புகிறோம்.
தடுப்பூசி திருவிழா என்பது மிகப்பெரிய மோசடி. பெருந்தொற்று என்பது திருவிழாவா? அது ஒரு துயரம், சோக நாள். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்திருந்தால் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையல் ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகளுக்கும், புதிதாக பொறுப்பேற்கும் அரசுகளுக்கும் பெரும் சவால்கள் உள்ளன. தற்போதைய தமிழக அரசு பெரும் கடன் சுமையையும், பெரும் தொற்று என்ற சவாலையும் வைத்துவிட்டு செல்கிறது.
முழு ஊரடங்கை மக்கள் வரவேற்க மாட்டார்கள். அது மீண்டும் வரக் கூடாது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க நான்கைந்து வழிகள் உள்ளன. ஆனால் மாநில அரசுக்கு கடன் வாங்குவது என்ற ஒரே வழி தான் உள்ளது.
அதனால் பெருந்தொற்றை சமாளிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும், என்றார்