

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே, பல்லடம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெற்றி பெற்றதாக சுவரொட்டி ஒட்டியிருப்பது பலரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி இது. ஆனால், எம்.எஸ்.எம்.ஆனந்தன் பல்லடம் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ஆனால், ஆனந்தனின் வீடு இங்கிருப்பதால், இப்படிச் செய்துள்ளதாகத் தெரிகிறது.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே 'வெற்றி வெற்றி வெற்றி' என்றும், 'எல்லாப் புகழும் வாக்காளப் பெருமக்களுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி' என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
சுவரொட்டியில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம் பெற்றிருப்பதைப் பலரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் பார்த்துச் செல்கின்றனர். சுவரொட்டியை ஒட்டியது அக்கட்சியின் பிரமுகர் பாஸ் (எ) பாஸ்கரன் என சுவரொட்டியிலிருந்து தெரியவருகிறது" என்றனர்.
இது தொடர்பாக அதிமுகவினர் கூறுகையில், "சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் அதிமுகவில் இருப்பவர்தான். விசாரித்து விட்டுச் சொல்கிறோம்" என்றனர்.
பல்லடம் தேர்தல் நடத்தும் அலுவலர் வி.கணேசன் 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறுகையில், "வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக அப்படிச் செய்யக்கூடாது. இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. இது தொடர்பாக விசாரிக்கிறோம்" என்றார்.
எம்.எஸ்.எம். ஆனந்தன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது வெற்றி பெறுவதற்கு முன்பே திருமணப் பத்திரிகைகளில் எம்.பி. என அவரது கட்சியினர் குறிப்பிட்டிருந்தனர். அப்போது தோல்வியைத் தழுவினார். தற்போது இந்த ’வெற்றிச் சுவரொட்டி’ பலரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.