

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதி தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் யார் என்பது நாளை தெரியவரும். காலை 11 மணிக்கெல்லாம் முன்னணி நிலவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்கள் 13,58,148. இதில் 9,03,770 பேர் வாக்களித்திருந்தனர்.
வாக்குப்பதிவு சதவிகிதம்- 66.54.
மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 76 பேர் போட்டியிட்டனர். பாளையங்கோட்டை தொகுதியில் ஜெரால்டு (அதிமுக), அப்துல்வகாப் (திமுக) உட்பட 10 பேர் போட்டியிட்டனர். திருநெல்வேலி தொகுதியில் நயினார்நாகேந்திரன் (பாஜக), ஏஎல்எஸ் லட்சுமணன் (திமுக) உட்பட 14 பேர் போட்டியிட்டனர்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கிசுப்பையா (அதிமுக), ஆவுடையப்பன் (திமுக) உள்பட மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர். நாங்குநேரி தொகுதியில் கணேசராஜா (அதிமுக), ரூபி மனோகரன் (காங்கிரஸ்) உட்பட 15 பேர் போட்டியிட்டனர். ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை (அதிமுக), அப்பாவு (திமுக) உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிட்டனர்.
இவர்களில் யார் வெற்றிபெறவுள்ளனர் என்பது நாளை தெரியவரும்.
இதற்கான வாக்கு எண்ணிக்கை திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி தொகுதிக்கு 30, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு 26, பாளையங்கோட்டை தொகுதிக்கு 28, நாங்குநேரி தொகுதிக்கு 29, ராதாபுரம் தொகுதிக்கு 27 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.
வேட்பாளர்கள், முகவர்கள், பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் செல்வதற்காக வாக்கு எண்ணும் மையத்தின் முன்பகுதியில் கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுண்ணாம்பால் வட்டமிட்டு வைத்துள்ளனர்.
மேலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 5 மணிக்கு பாதுகாப்பு பணிக்கு போலீஸார் வருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.