Published : 01 May 2021 05:43 PM
Last Updated : 01 May 2021 05:43 PM

டன்லப் தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைத் தனியாருக்கு விற்க அரசாணை: உயர் நீதிமன்றம் கண்டனம்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

டன்லப் டயர் தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைத் தனி நபருக்கு விற்பனை செய்ய 2008ஆம் ஆண்டில் அனுமதி அளித்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசாணை பிறப்பிக்கப்பட்டதற்கான சூழல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த அம்பத்தூர், அத்திப்பட்டு பகுதிகளில் உள்ள 165 ஏக்கர் நிலத்தை டயர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக, டன்லப் நிறுவனத்திற்கு தமிழக அரசு 1963ஆம் ஆண்டு விற்பனை செய்தது.

காலப்போக்கில் அந்நிறுவனம் லாபத்தில் இயங்காததால், தொழிலாளர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்காக 2004ஆம் ஆண்டு 60 ஏக்கர் நிலத்தை சென்னை செனாய் நகரைச் சேர்ந்த வி.என்.தேவதாஸ் என்பவர் பெயருக்கு விற்பனை செய்தது. அவர் வி.குருசாமி நாயுடு அண்ட் கோ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை உருவாக்கி, அதன் பெயருக்கு 60 ஏக்கர் நிலத்தையும் மாற்றம் செய்துள்ளார்.

அதன்படி தற்போது அம்பத்தூரில் வி.ஜி.என். ப்ராஜெக்ட் எஸ்டேட் என்ற பெயரில் வி.ஜி.என். விக்டோரியா பார்க் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டுவதற்கு திட்டமிட்டு விளம்பரப்படுத்தியது. அதில் வீடு வாங்குவதற்காக வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ஜே.ரவிக்குமார் என்பவர் விஜிஎன் நிறுவனத்தை அணுகியபோது, நிலத்தின் உண்மைத் தன்மை தொடர்பாக பல்வேறு ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் அளிக்காததால் ரவிக்குமார் இதுகுறித்துப் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பீஜியன் நிறுவனத்தின் நிர்வாகிகளான வி.என்.தேவதாஸ், என்.பாஸ்கர், பி.பாஸ்கரன், டி.பத்மா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் தங்களைக் குறித்து அவதூறு பரப்பக் கூடாது என்றும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கை கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட ரவிக்குமாருக்குத் தடை விதித்திருந்தார்.

பின்னர் இந்த வழக்கு வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரவிக்குமார் தரப்பில், “டன்லப் தொழிற்சாலை நலிவடைந்தால் அந்த நிலத்தை மீண்டும் அரசிடம் கொடுக்க வேண்டும் என விதிகள் உள்ள நிலையில், தனி நபருக்கு விற்றது சட்டவிரோதம் எனவும், 2 ஆயிரம் கோடி மதிப்புடைய நிலத்தைத் தனியாருக்கு விற்றதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது” எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பின்னர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ஒரு சொத்தை வாங்கும்பொழுது அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்கின்ற உரிமை வாங்குபவருக்கு உள்ளது. அதனடிப்படையில் ரவிக்குமார் ஆவணங்களைக் கேட்டதில் தவறில்லை எனக்கூறி, அவர் விஜிஎன் நிறுவன நிர்வாகிகள் குறித்துப் பேசுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.

மேலும், அந்த நிலத்தை மீண்டும் அரசு எடுப்பதற்கு 2007ஆம் ஆண்டே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், அரசுக்குப் பரிந்துரைத்தும், அதை அலட்சியப்படுத்தி தனியாருக்கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கியது கண்டனத்திற்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

லாபத்தில் இயங்கவில்லை என்ற காரணத்திற்காக ஒரு நிறுவனம் மூடப்பட்டால் அந்த நிலத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அசல் உரிமையாளருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றம் செய்வதென்றால் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் விதிகள் இருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை மீறி டன்லப் நிறுவன இடத்தைத் தனி நபருக்கு விற்க அனுமதி அளித்த 2008ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்ட சூழல் குறித்து ஆய்வு செய்யவும், அனுமதி அளித்த அரசாணையை மறு ஆய்வு செய்யவும் தமிழக தலைமைச் செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதுகுறித்து ஜூன் 30ஆம் தேதி அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x