

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அடுத்த 2 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படுவதால் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாளைய பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிச் செல்கிறது. தினசரி 4 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்திலும் இதேபோன்று தினசரி 18 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகின்றனர். தினசரி 100 பேருக்கு பரிசோதனை செய்தால் அதில் 13.5 பேருக்கு தொற்று உறுதியாகிறது. இது கடந்த ஒரு வாரத்திற்கு முன் 9 சதவீதமாக இருந்தது.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் வீடு மற்றும் மருத்துவமனையில் தனிமையில் உள்ளனர். ஆக்சிஜன், படுக்கை வசதிகள் குறித்த பயம் அதிகரித்துக்கொண்டே வருகிறது, மறுபுறம் தடுப்பூசி போடுவோர் வந்தாலும் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. கரோனா தொற்றால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலான நிலையில் பொதுமக்கள் வருமானம் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தனை பரபரப்புக்கிடையேயும் மதுபானப் பிரியர்கள் தங்கள் மது அருந்தும் போக்கை கைவிடவில்லை என்பதை கடந்த ஒருவார நிகழ்வு காண்பிக்கிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, மீண்டும் கட்டுப்பாடுகள் ஞாயிறு முழு ஊரடங்கு என அரசு அறிவித்தது. இதையடுத்து காய்கறி, மளிகைசாமான் வாங்கும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி மே.1, 2 ஆகிய 2 நாட்கள் மதுக்கடை இல்லை என்பதால் நேற்று ஒரே நாளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.292 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. நேற்று காலைமுதல் மதுபானக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. கரோனா தொற்று எண்ணிக்கையில் முன்னணியில் இருப்பதுபோன்று மது விற்பனையிலும் சென்னை முன்னணியில் உள்ளது.
அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.63.44 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.59.63 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.56.72 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.56.37 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.55.93 கோடிக்கும் என மொத்தம் ரூ.292.09 கோடிக்கு நேற்று ஒரே நாளில் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
வழக்கமாக மது குடிப்போர், வாக்கு எண்ணிக்கை தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் என அரசியல் கட்சியினர், தொண்டர்கள் மதுபானங்களை வாங்கி சேமித்ததால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதுவரை கடந்த 5 நாளில் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாகவும் இதற்கு முன் எப்போதும் இவ்வளவு அதிக அளவு மது விற்பனை நடந்ததில்லை எனவும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அனைத்துக்கும் கடும் கட்டுப்பாடு, ஆனால் டாஸ்மாக் கடைகளில் மட்டும் எவ்வித சமூக விலகல், முகக்கவசம் கட்டுப்பாடு இல்லாமல் கூட்டமாக மதுவுடன் கரோனா தொற்றையும் வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்களை காண முடிந்தது. தற்போது பரவும் டபுள் மியூடண்ட் கரோனா மிக மிக அதிவேக பரவல் கொண்டது.
அதனால் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி சமூக விலகல், முகக்கவசம், அதுவும் இரட்டை முகக்கவசம் அல்லது என்.95 முகக்கவசம் மட்டுமே பாதுகாப்பு என மருத்துவர்கள் தெரிவிக்கும் நிலையில் நாடெங்கும் மதுபான கடைகளை இவைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளது மது அருந்துவோரை மட்டுமல்லாமல் அவர்கள் வீட்டில் உள்ளவர்களையும் கரோனா தொற்றுக்கு ஆளாக்கும் நிலைக்கே தள்ளும்.