Published : 01 May 2021 12:42 PM
Last Updated : 01 May 2021 12:42 PM

வாக்கு எண்ணிக்கையில் அமமுகவினர் முழு கவனத்துடன் இருக்க வேண்டும்: தினகரன் வேண்டுகோள்

தினகரன்: கோப்புப்படம்

சென்னை

வாக்கு எண்ணிக்கையில் அமமுகவினர் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (மே 1) கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

"தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் நாளை வெளியாக இருக்கின்றன. தேர்தல் களத்தில் உங்கள் ஒவ்வொருவரின் கடுமையான உழைப்புக்கான பலன் நமது இயக்கத்திற்குக் கிடைக்கவிருக்கிறது. தமிழக மக்களின் மனங்களில் நமக்கென்று தனியிடம் இருப்பது உறுதியாகப் போகிறது.

கருத்துக்கணிப்புகளைத் தாண்டி நம்முடைய கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறவிருக்கிறது. வாரியிறைக்கப்பட்ட பண மூட்டைகளையும், வாக்குறுதிகள் என்ற பெயரில் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பொய் மூட்டைகளையும் கடந்து நாம் அழுத்தமான முத்திரையைப் பதிக்கப் போகிறோம்.

வேஷம் கட்டி மக்களை ஏமாற்றிய போலிகளை அடையாளம் காட்டி, புடம் போட்ட தங்கமாக, ஜெயலலிதாவின் உண்மையான வழித்தோன்றலாக அமமுக பிரகாசிக்கப் போகிறது. நம் லட்சியத்தை அடைந்து, ஜெயலலிதாவின் மக்கள் நலக் கொள்கைகளை உயர்த்திப் பிடித்து, தமிழக மக்களின் அன்பைப் பெற்ற தனிப்பெரும் சக்தியாக நாம் எழுந்து நிற்கப் போகிறோம்.

அத்தகைய மகத்தான வெற்றியை உறுதி செய்ய, நாளை வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கிற அமமுகவினர் முழு கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். எந்தவிதமான கவனச் சிதறலுக்கும் இடம் கொடுக்காமல், கடைசி வாக்கு எண்ணி முடிக்கப்படும் வரையிலும் அமமுக முகவர்கள் அந்தந்த மையங்களில் இருந்திட வேண்டும்.

எந்தச் சுற்றிலும் வாக்கு எண்ணிக்கையின் போக்கு மாறலாம். அதனால் சிறிய கவனப்பிசகோ, மனச்சோர்வோ, சுணக்கமோ ஏற்பட்டால் கூட அது நமது வெற்றியைச் சேதப்படுத்திவிடும். தேர்தல் களத்தில் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் சிம்ம சொப்பனமாகப் பணியாற்றியதைப் போலவே எதற்கும் இடம் கொடுத்துவிடாமல் வாக்கு எண்ணிக்கையிலும் கொள்கை காத்திடும் செயல் வீரர்களாக உறுதியோடு நின்றிட வேண்டும்.

அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறபடி கரோனா தடுப்பு வழிமுறைகளையும் சரியாகக் கடைப்பிடித்திட வேண்டும். தங்களின் பாதுகாப்பும், குடும்பத்தாரின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது.

கரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு கடுமையாக இருக்கிற நேரத்தில், ஒழுங்கான முகக்கவசம் அணிவது, போதுமான தனி மனித இடைவெளி உள்ளிட்டவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கை பணிக்கான முக்கியத்துவத்தைப் போன்றே உங்கள் ஒவ்வொருவரின் உடல் நலனும் முக்கியமானது.

எனதருமை அமமுகவினர் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல், நம்முடைய இலக்கினை வென்றெடுத்து வாகை சூடினோம் என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிற செய்தியாக இருக்கும். ஜெயலலிதாவின் உண்மையான பிள்ளைகளாக நின்று அத்தகைய சாதனையை நிகழ்த்திக் காட்டி புதிய சரித்திரம் படைத்திடுவோம்!".

இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x