Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

உழைப்பாளிகளின் சிறப்பை உலகுக்கு பறைசாற்றும் உன்னத தினம்- முதல்வர் பழனிசாமி, தலைவர்கள் மே தின வாழ்த்து

சென்னை

மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர்கள் கூறியிருப்பதாவது:

முதல்வர் பழனிசாமி: உழைக்கும் மக்களின் சிறப்பை உலகுக்கு பறைசாற்றும் உன்னத தினமான மே தினத்தில், உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ‘மேதின' நல்வாழ்த்துகள். தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: உழைப்பாளர்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு மறுக்கப்பட்டதை எதிர்த்து ஓயாதுபோராடி, தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளே மே தினம். இந்நாளில்,தங்களது தளர்வறியா உழைப்பின் மூலம்தமிழகத்தை உயர்த்தி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உளமார்ந்த `மே தின’ நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: தொழிலாளர்கள்தான் நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பு. அவர்களின் நலம் காக்கும் அரசுதான், நாட்டுக்கும் வளம் சேர்க்கும். புதிதாக அமையப் போகும் திமுக ஆட்சியில் தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களைத் தொய்வின்றி நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பாட்டாளிகள்தான் இந்திய நாட்டின் முதுகெலும்பு. அந்தமுதுகெலும்புகள் இப்போது முறிந்து கிடக்கின்றன. இருளுக்குப் பிறகு ஒளி என்பது இயற்கை. பாட்டாளிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்.

தி.க தலைவர் கி.வீரமணி: கரோனா காலத்தில் பெரும் துயரத்துக்கு ஆளாகியிருக்கும் தொழிலாளர்களின் நிலை மாற இந்நாளில் உறுதியேற்போம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: உழைக்கும் தோழர்களின் உரிமைகளுக்காக பாடுபடுகின்ற சக்திகளை ஒன்று திரட்டி, மேலும், மேலும் வெற்றிகள் குவிக்க உழைப்போம் என சூளுரைப்போம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கரோனாவிலிருந்து மக்களை காப்போம். சாதி, மதவெறி சக்திகளை முறியடிப்போம். உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், நல்வாழ்வுக்கான திட்டங்களுக்காகவும் போராடுவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: அடுக்கடுக்கான அரசியல் கடமைகள் அடுத்தடுத்து வருகின்றன. அவற்றை நிறைவேற்றி, வகுப்புவாத, நிதி மூலதன சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற மேதின நாளில் உறுதி ஏற்போம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு. அவர்களின் உழைப்பே நாட்டின் வளர்ச்சி. மே தினத்தில்தொழிலாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க உறுதியேற்போம்.

தமிழக காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விஜய்வசந்த்: நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி பாடுபடும் விவசாயிகள், உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், கொடிய கரோனாபெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்கதன்னலம் பாராது உழைக்கும் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: கரோனா போன்ற இந்த பெருந்தொற்று காலத்திலும் உழைப்பாளர்களின் உழைப்புதான் மக்களைக் காப்பாற்றி வருகிறது. உழைப்பவர்களுக்கு தேவையானவை அனைத்தும் கிடைக்க மே நாளில் உறுதியேற்போம்.

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:இந்த மேதின நன்னாளில் தொழிலாளர்களைச்சுரண்டும் அனைத்து சக்திகளையும் ஒழித்துதொழிலாளர்களுக்கான உரிமைகளையும், பயன்களையும் பெற உறுதியேற்போம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாமக இளைஞரணித் தலைவர்அன்புமணி, சமக தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோரும் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x