Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

டொரண்டோவில் தமிழ் இருக்கை உறுதியானது: கனடா நாட்டின் பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

டொரண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபுரோ வளாகத்தில் தமிழ் இருக்கை குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்த குழுவினர்

பட்டியலில் அடக்க முடியாத சிறப்புகளைக் கொண்ட தமிழ் மொழியின் இலக்கிய வளம் உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். அதற்கு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன், அமெரிக்காவில் தொடங்கப்பட்டது, தமிழ் இருக்கை அமைப்பு (Tamil Chair Inc). ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைப்பதை தன் முதல் இலக்காகக் கைகொண்டது இந்த அமைப்பு. அதற்கு, 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை (40 கோடி ரூபாய்) ஆதார நிதியாகப் பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டியது அவசியம்.

தமிழ் இருக்கை அமைப்பின் முதன்மை இயக்குநர்களான மருத்துவர் விஜய் ஜானகிராமன், மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம் ஆகிய இருவரும் தலா அரை மில்லியன் டாலர்களைத் தொடக்க நன்கொடையாக வழங்கி ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தனர். அதை, 'இந்து தமிழ் திசை', ‘தி இந்து’ ஆங்கிலம் ஆகிய நாளிதழ்கள் முதன் முதலில் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிவித்தன. 'இந்து தமிழ் திசை' நாளிதழ், ஹார்வர்டு தமிழ் இருக்கையின் அவசியத்தை எடுத்துக்காட்டி தொடர் கட்டுரைகளையும் அது தொடர்பான செய்திகளையும் இடையறாது வெளியிட்டது. அத்துடன், தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கைகளில் தமிழ் இருக்கை இடம்பெறும் வண்ணம், தன்னுடைய ‘வாசகர் திருவிழா’, ‘யாதும் தமிழே திருவிழா’ ஆகிய நிகழ்ச்சிகளில் முன்னாள், இந்நாள் நீதிபதிகளைக் கொண்டு பரப்புரை செய்து கவனப்படுத்தி வந்தது வாசகர்களுக்கு தெரிந்ததே.

டொரண்டோ பல்கலைக்கழகம்

ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைக்கத் தேவையான எஞ்சிய ஆதார நிதியை, உலகம் முழுவதும் வாழும் தமிழ் ஆர்வலர்களும், கல்வியாளர்களும் பற்றாளர்களும் வாரி வழங்கியதுடன் தமிழக அரசு 10 கோடி ரூபாயும், திமுக 1 கோடி ரூபாயும் அளித்து இலக்கை எட்டிடக் கரம் கொடுத்தன. வெற்றிகரமாகத் தற்போது ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமையப்பெற்று, அதை வழிநடத்திச் செல்லும் தலைமைப் பேராசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பணியைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. பேராசியர் தேர்தெடுக்கப்பட்டுப் பணியில் அமர்த்தப்பட்டதும் அவருடைய தலைமையில் தமிழ் இருக்கை ஹார்வர்டில் தன்னுடைய செயல்படுகளைத் தொடங்கும்.

இரண்டாம் இலக்கிலும் வெற்றி

ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, 5 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் கனடா நாட்டின் புகழ்பெற்ற டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணி, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. அதற்குத் தேவைப்படும் 3 மில்லியன் டாலர்கள் (17.1 கோடி ரூபாய்) நிதியைத் திரட்டித் தற்போது தன்னுடைய இரண்டாம் இலக்கிலும் வெற்றியடைந்துவிட்டது கனடியத் தமிழ்ச் சமூகம். இந்த முயற்சியானது, தமிழ் இருக்கை அமைப்பும், கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து எடுத்த கூட்டுச் செயல்திட்டமாகும்.

இந்த முயற்சிக்கு கனடா, இலங்கை மட்டுமல்லாது, உலகத்தின் பல பாகங்களில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து நன்கொடைகள் வியப்பூட்டும் வகையில் வந்து குவிந்தன. 4000 உலகத் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும், கிராமச் சங்கங்களும், பள்ளிகளில் கல்லூரிகளில் இணைந்து பயின்ற பழைய மாணவ மாணவியரும், முதியோரும் சிறுவர் சிறுமியரும் கூட ஆர்வத்தோடு பங்குபெற்று டொரண்டோ தமிழ் இருக்கையின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள். ஹார்வர்டு தமிழ் இருக்கையை வாசகர்களிடம் கொண்டு சென்றதுபோலவே டோரண்டோ தமிழ் இருக்கையையும் 'இந்து தமிழ் திசை' நாளிதழ் கொண்டு சென்றதையும் வாசகர்கள் அறிவார்கள்.

தற்போது, தமிழக அரசு வழங்கிய ஒரு கோடி ரூபாய், திமுக வழங்கிய 10 லட்சம் ரூபாய், தந்தை செல்வநாயகம் அறக்கட்டளை வழங்கிய 1.4 கோடி ரூபாய் ஆகியன, டொரண்டோ தமிழ் இருக்கை அமைக்கத் தேவைப்படும் ஆதார நிதி இலக்கை எட்ட வேண்டிய இறுதிக்கட்டத்தில் இணைந்துகொள்ள, 17.1 கோடி ரூபாயைத் துரிதமாக திரட்ட உதவின.

தமிழர்களுக்கும் தமிழுக்கும் முக்கியத்துவம் அளித்து ‘தமிழ் மரபுத் திங்கள்’ எனத் தை மாதத்தைக் கனடா அரசாங்கமே கொண்டாடி வருகிறது. அந்நாட்டினுடைய உயரிய பல்கலைக்கழகமான டோரண்டோவில் தமிழுக்கு இருக்கை அமையவிருப்பது கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டொரண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபுரோ வளாகத்தின் தலைவர் விஸ்டம் டெட்டி, இந்த முயற்சியில் தமிழ்ச் சமூகம் ஒன்றாக இணைந்து அர்ப்பணிப்புடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு வென்று காட்டியிருப்பதை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.

அ.முத்துலிங்கம்

முன்நின்றவர்களின் பார்வை

டொரண்டோ தமிழ் இருக்கை அமைய முன்களச் செயல்வீரர்களாக மனமுவந்து பணியாற்றியவர்கள் பலர். அவர்களில் ஒருவரும், தமிழ் வாசகர் உலகம் நன்கறிந்த கனடா வாழ்த் தமிழ் எழுத்தாளருமான அ.முத்துலிங்கத்திடம் இதுபற்றிக் கேட்டபோது, “கனடாவில் சீக்கியர், மலையாளி, தமிழர் உட்பட பல இன மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், தமிழர்கள் மட்டுமே தங்களுடைய உயிராகிய தமிழுக்கு டொரண்டோ பல்கலைக்கழகத்தில் இருக்கை கண்டிருக்கிறார்கள்.

டொரண்டோ தமிழ் இருக்கை, தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைக் கற்றுத்தருவதோடு பல்வேறு முக்கியமான ஆய்வுகளை முன்னெடுக்கும் மையப்புள்ளியாகவும் அமையும். இந்தப் பணிகளில் முன்னின்று தமிழ் இருக்கை நிறுவுவதற்கு உழைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் மு.ஆறுமுகம், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கோ. பாலச்சந்திரன், கனடியத் தமிழ்ப் பேரவைத் தலைவர் சிவன் இளங்கோ, மருத்துவர் வ.ரகுராமன், டன்ரன் துரைராஜா ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். அத்துடன் சர்வதேசத் தமிழ் இருக்கை முயற்சிகளைத் தொடர்ந்து தமிழ்ச் சமூகத்திடம் கவனப்படுத்திவரும் 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கும் உளமார்ந்த நன்றி” என்றார்.

மருத்துவர் விஜய் ஜானகிராமன்

தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குநர்கள் குழுவுக்கு தலைமை வகித்து வரும் மருத்துவர் விஜய் ஜானகிராமனிடம் கேட்டபோது, “ஏனைய செம்மொழிகள் அனைத்துலகக் கல்வி மையங்களில் நிறுவப்பட்டு ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் மூலம் பல நன்மைகளைப் பெற்றுள்ளன. ஹார்வர்டு, டொரண்டோ பல்கலைக்கழகங்களில் அமையும் தமிழ் இருக்கைகள் தமிழுக்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் அளிப்பதோடு, தமிழ்மொழியின் தொடர் பயன்பாட்டிற்கும் முன்னேற்றத்துக்கும் வலுச்சேர்த்துப் பல சர்வதேசக் கல்வி நிறுவனங்களில் தமிழ் இடம்பெற எடுத்துக்காட்டாகத் திகழும். இது இரண்டாவது பெரிய வெற்றி” என்றார்.

முனைவர் ஆறுமுகம்

தமிழ் இருக்கைக் குழுவின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள முனைவர் மு. ஆறுமுகத்திடம் கேட்டபோது, “ஒரு மொழி பேசும் குழுவினரால் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் முதல் இருக்கை இது என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று. இது மற்ற இருக்கைகளுக்கு முன்மாதிரியாக அமையும்;தமிழ் மொழியின் பாரம்பரியத்துக்கும், தொன்மைக்கும் மேன்மைக்கும் சாட்சியாக என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழ் இருக்கைப் பணிகளுக்குத் தொடர்ந்து வெளிச்சம் தந்து வரும் இந்து தமிழ் திசைக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x