Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றிச் சான்றிதழ் பெறும் வரை வேட்பாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றிச் சான்றிதழ் பெறும் வரை திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி, திமுகமாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்களுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் ஸ்டாலின் உரையாற்றினார். ‘‘அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக ஆட்சி அமைக்கும் என்றே கூறுகின்றன. அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகவுள்ள திமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

திமுக வெற்றி உறுதி என்றாலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றிச் சான்றிதழ் பெறும் வரை திமுக முகவர்கள் மிகுந்த விழிப்புடன், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதை மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். தபால் வாக்குகள் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகேமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ண வலியுறுத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது எவ்வித தவறுகளும் நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்களுக்கு உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம்.

கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் வீதிகள்,சாலைகள், பொது இடங்களில்வெற்றிக் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும். தொலைக்காட்சிகள், இணையதளங்களில் முடிவுகளைத் தெரிந்துகொண்டு வீட்டிலேயே வெற்றியைக் கொண்டாட வேண்டும்’’ என்று ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் ஒருவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x