

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் 50 சதவீதப் படுக்கைகளை கரோனா சிகிச் சைக்கு ஒதுக்க வேண்டும் எனதமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
நோயாளிகள் அவதி
குறிப்பாக, சென்னையில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின் றனர். உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாளுக்குநாள் தொற்றுப் பாதிப்புஅதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டுபோல், தற்போது பல தனியார் மருத்துவமனைகளும் கரோனா சிகிச்சைக்குப் போதிய படுக்கைகளை ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்கு 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர்.
ஆனால், தனியார் மருத்துவமனைகள் படுக்கைகளை ஒதுக்கவில்லை என்ற தகவல் சுகாதாரத் துறைக்கு தெரியவந்தது.
இந்நிலையில் சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில், “தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள மொத்தப் படுக்கைகளில் 50 சதவீதப் படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும். குறிப்பிட்ட அளவில் ஆக்சிஜன் படுக்கைகள் இருக்க வேண்டும். அதேபோல், திட்டமிட்ட அறுவைச் சிகிச்சைகளை தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரி வித்துள்ளார்.