

சரியாக ஆராயாமல் குண்டர் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் ஒருவரை கைது செய்வதற்கான உத்தரவை அதிகாரிகள் பிறப்பிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழல் மத்தியச் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் பி.புகழேந்தி ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை முடித்து வைத்த தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
“தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய உத்தரவிடும் முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனதினை நன்கு செலுத்தி, தீவிரமாக ஆராய்ந்து, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே கைது செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படாததால் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட பல உத்தரவுகள் இந்த நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுகின்றன” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
“நல்ல நிர்வாகம் நடைபெற வேண்டுமானால் நிர்வாகத்தில் இருப்போரின் தவறுகள் மிகவும் குறைவாக இருக்க வேண்டும். விதிகளுக்கு மாறாக ஒருவரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கும் போது, எல்லா தரப்பினரின் நேரம், ஆற்றல், பணம் போன்றவை விரயமாகின்றன. அது போன்ற கைது உத்தரவுகள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டாலும் கூட, அதற்கு முன்னதாக கைது செய்யப்பட்டவர் நீண்ட காலம் சிறையில் இருந்தாக வேண்டிய நிலை உள்ளது.
ஆகவே, தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரிகள், அது குறித்து எவ்வாறு முடிவு எடுப்பது என்பது தொடர்பான வழிமுறைகளை அரசு ஏற்படுத்திட வேண்டும். தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை தினமும் சேகரித்து, உடனடியாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய வசதியாக, இதற்காகவே ஒரு அதிகாரியை தனியாக நியமிக்கலாம்” என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
பொய்யான காரணங்களைக் கூறி தங்களை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதாகவும், இதை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது நீதிமன்றம் விரைவாக விசாரணை நடத்துவதில்லை என்றும் கூறி சென்னை புழல் மத்தியச் சிறையில் உள்ள கைதிகள் கடந்த மார்ச் 24-ம் தேதி போராட்டம் நடத்தினர்.
அப்போது கைதிகளை சிறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியதாகவும், பல கைதிகள் படுகாயமடைந்தும் அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
எனினும் இதை மறுத்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, கைதிகள்தான் சிறை விதிமுறைகளை மீறி செயல்பட்டதுடன் வன்முறையிலும் ஈடுபட்டதாக வாதம் செய்தார்.
என்ன நடந்தது என்பதை மனுதாரர் நேரடியாக பார்க்காத நிலையில், பிறர் சொல்லியதைக் கேட்டு கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்க இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், நீதி விசாரணை கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.