கரோனா கட்டுப்பாட்டால் குறைந்தது வரத்து: சீசன் தொடங்கியும் களைகட்டாத மாம்பழம் விற்பனை

யானைக்கல் பகுதியில் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மாம்பழங்கள். படம்: ஜி.மூர்த்தி
யானைக்கல் பகுதியில் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மாம்பழங்கள். படம்: ஜி.மூர்த்தி
Updated on
1 min read

மாம்பழ சீசன் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் சந்தை களில் பழங்கள் வரத்துக் குறைவாக இருப்பதால் விற்பனை இன்னும் களைகட்டவில்லை. கரோனா ஊரடங்கு ஏற்படுத்திய நெருக்கடியால் மக்கள் மத்தியில் மாம்பழங்களுக்கு முன்பிருந்த வரவேற்பு இல்லை.

மாம்பழ சீசன் மார்ச் இறுதியில் தொடங்கி ஜூலை வரை நீடிக்கும். ஏப்ரல் இறுதி முதல் மே மாதம் வரை மாம்பழ சீசன் உச்சத்தில் இருக்கும். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் மாம்பழ சீசன் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் ஏமாற்றமாக இருந்தது. இந்த ஆண்டு மாம்பழ சீசன் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் தற்போது வரை சந்தைகளுக்கு மாம்பழங்கள் வரத்து பெரியளவில் இல்லை. வரத்துக் குறைவாக இருப்பதால் அதன் விலை அதிகமாக இருக்கிறது என மதுரை மாவட்ட பழ வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட், யானைக்கல், மாசி வீதி மற்றும் சிம்மக்கல் பழக்கடைகளுக்கு மாவட்டத்தில் உற்பத்தியாகும் உள்ளூர் மாம்பழங்கள் மட்டுமின்றி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் இதுபோன்ற சீசன் நேரத் தில் விற்பனைக்கு அதிகளவு வரும்.கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தற்போது மாம்பழங்கள் வரத்து ஓரளவு அதிகரித்தாலும் அனைத்து வகை மாம்பழங்களும் இன்னும் முழுமையாக வரவில்லை.

இது குறித்து யானைக்கல் கீழ மாசி வீதி மாம்பழ வியாபாரி முத்துகுமார் கூறியதாவது:

தொடக்கத்தில் சற்று புளிப்பு சுவையுடன் கூடிய மாம்பழங்கள் விற்னைக்கு வரும். ஏப்ரல் இறுதியில் சராசரி இனிப்புள்ள மாம்பழங்களும், மே மாதம் முதல் இனிப்பும், சுவையும் அதிகமுள்ள தரமான மாம்பழங்கள் வரத் தொடங்கும். அதனால், மே மாதம் முதல் பழக்கடைகளில் மாம்பழங்கள் விற்பனை அதிகரிக்கும்.

விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள். மதுரை பழக்கடைகளில் இந்த காலகட்டத்திலே இமாம்பசந்த், அல்போன்சா, பாலாமணி, சப்பட்டை, பெங்களூரா, பங்கனப்பள்ளி மற்றும் குண்டு மாம்பழங்கள் அதிகளவு விற்பனைக்கு குவியும். ஆனால், இதில் பெரும்பாலான வகை மாம்பழங்கள் வரவில்லை.

மாம்பழ சீசனும், பழங்கள் வரத்தும் சுமாராக இருப்பதால் விலை கூடுதலாக உள்ளது. ஒரு கிலோ இமாம்பசந்த் ரூ.130 முதல் 150, சப்பட்டை ரூ.70 முதல் 100, பாலாமணி ரூ.70 முதல் 100, அல்போன்சா ரூ.160 வரை விற்பனையாகிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தற்போது ஓரளவு விலை குறைந்துள்ளது. கரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியால் மக்களிடம் பழங்கள் வாங்கும் சக்தி இல்லாததால் விற்பனை முன்புபோல் இல்லை, என்று கூறினார்.

மாம்பழங்களை இயற்கையாகப் பழுக்க வைத்தால் அதன் சுவையும், மனமும் தித்திப்பாக இருக்கும். மரத்திலிருந்து பறிக்கப்படும் மாங்காய்கள் பழுப்பதற்கு 4 முதல் 6 நாட்கள் வரை ஆகும். ஆனால், அதற்குள் அவசரப்படும் வியாபாரிகள் மாங்காய்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் அதன் சுவையும், தரமும் குறைந்துவிடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in