

பள்ளி திறந்த முதல் நாள் அன்றே தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிவடைந்து தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் திங்கள் கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. அடுத்த வகுப்புக்கு மாறிச் செல்லும் மகிழ்ச்சியில் அனைத்து மாணவ-மாணவிகளும் உற்சாக மாக பள்ளிக் கூடத்துக்கு வந்தனர்.
நீண்ட நாட்கள் கழித்து வகுப்பு நண்பர்களைப் பார்த்த மகிழ்ச்சி யில் குதூகலம் அடைந்தனர். விடு முறை கால அனுபவங்களை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
1.10 கோடி பேருக்கு புத்தகம்
இதற்கிடையே, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப் பட்டன. முதல் நாளில் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு புத்தகமும், 82 லட்சம் பேருக்கு நோட்டும், 46 லட்சம் பேருக்கு சீருடையும் வழங்கப்பட்டதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா மேல் நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி மாணவ-மாணவிகளுக்குப் பாடப் புத்தகங்களையும் நோட்டுகளை யும் வழங்கினார்.
அவர் பேசும்போது, “பள்ளிக் கல்வியை ஊக்குவிக்கும் வகை யில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு 14 விதமான விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்றிருப்பது அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மேலும் உயர்ந்திருப்பதற்கு எடுத்துக் காட்டு” என்றார்.
இந்த விழாவில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்ணி, பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரன் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.