Last Updated : 01 May, 2021 03:16 AM

 

Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

நெல்லை, குமரி மாவட்டங்களில் உணரப்பட்ட நில அதிர்வு குறித்து விரிவான ஆய்வு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திட்டம்

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து விரிவான ஆய்வு நடத்தமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக புவி தொழில் நுட்பத்துறை திட்டமிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதிகளான வள்ளியூர், பணகுடி, பழவூர், செட்டிகுளம், கூடங்குளம், இடிந்தகரை, பெருமணல், ராதாபுரம், இருக்கன்துறை, தெற்குகள்ளிகுளம், விஜயாபதி மற்றும் கடலோர கிராமங்களில் நேற்று முன்தினம் பிற்பகல் 3.38 மணியளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது.

மக்கள் அச்சம்

3 விநாடிகளுக்கு நீடித்த இந்த நிலஅதிர்வை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரம், சுசீந்திரம், மருங்கூர், அஞ்சுகிராமம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது. இரு மாவட்டங்களிலும் கடலோரப் பகுதிகளில் நிகழ்ந்தநிலஅதிர்வு காரணமாக மக்கள் மத்தியில்அச்சம் நிலவியது. ஆனால், நிலஅதிர்வால்எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கூடங்குளம் பகுதியிலும் நிலஅதிர்வு உணரப்பட்ட நிலையில் முக்கியத்துவம் வாய்ந்தஅணுஉலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அங்குள்ள அளவு மானிகளிலும் நிலஅதிர்வு குறித்து எதுவும் பதிவாக வில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குழப்பம் நீடிப்பு

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரிவதற்குமுன் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிஇரவு 9 மணியளவில் மேலகரம், அச்சன்புதூர், வடகரை, பண்பொழி, தென்காசி பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டது.

இவ்வாறு திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே அவ்வப்போது நிலஅதிர்வு ஏற்படுவதும், பொதுமக்கள் அச்சமடைவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நிலஅதிர்வுக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் தரப்பிலும், விஞ்ஞானிகள் தரப்பிலிருந்தும் உரிய விளக்கங்கள் அளிக்கப்படுவதில்லை. இதனால் நிலஅதிர்வு குறித்து மக்கள் மத்தியில் குழப்பமே நீடித்து வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி அருகேஅபிஷேகப்பட்டியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக, புவி தொழில் நுட்பத்துறை சார்பில் நேற்றுமுன்தினம் நிகழ்ந்த நிலஅதிர்வு குறித்துவிரிவான ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து இத்துறையின் தலைவர் பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:

ஆய்வு நடத்த திட்டம்

இந்தோனேசியா போன்ற நாடுகளிலும், இந்தியாவில் வட மற்றும் மத்தியமாநிலங்கள், அஸாமிலும் கடந்த சிலநாட்களாக நிலஅதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே தென்னிந்தியப் பகுதிகளில் கடலோரத்தை ஒட்டிய இடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இதனால் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. பொதுமக்களும் அச்சம் கொள்ள தேவையில்லை. இந்த நிலஅதிர்வு தொடர்பாக விரிவான ஆய்வுக்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

பல்கலைக்கழக புவி தொழில் நுட்பத்துறை வளாகத்தில் நிலஅதிர்வுகளை அளவிடும் அளவுமானி உள்ளது. மின்தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது செயல்பாட்டில் இல்லை. இதனால் நிலஅதிர்வுகுறித்து எதுவும் அதில் பதிவாகவில்லை. அந்த அளவுமானியை செயல்பாட்டுக்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலஅதிர்வின் அளவு குறைவாக இருந்தாலும் அதிநவீன அளவுமானிகளில் அவை பதிவாகும். அந்த அளவுக்கு அதிநவீன உபகரணங்கள் நம்மிடம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே அவ்வப்போது நிலஅதிர்வு ஏற்படுவதும், பொது மக்கள் அச்சமடைவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x