

பறவைகளுக்கு தினமும் இரை,தண்ணீர் வழங்கி வரும் கடையநல்லூர் இளைஞர் சிட்டுக்குருவிகளுக்கு புகலிடம் அளிக்க தினமும்ஒரு கூடு செய்து வீடுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் காஜா மைதீன் (26). இவர் கடந்த 4 ஆண்டுகளாக கடையநல்லூர், கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகிறார். ஊறுகாய் வியாபாரம் செய்து வருகிறார். தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை பறவைகளுக்காக செலவிடுகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தனது வீட்டின் முன் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து தினமும் இரை வழங்கி வருகிறார்.
தினமும் காகம், மைனா, சிட்டுக்குருவிகள் இவரது வீட்டு முன் திரண்டு வந்து இரையை உட்கொண்டு, தண்ணீர் அருந்திச் செல்கின்றன.
இதுகுறித்து காஜா மைதீன் கூறும்போது, “பறவைகளை பார்த்தாலே மன அமைதி கிடைக்கும். அதனால், எனது வீட்டின் முன்பறவைகளுக்காக பாத்திரங்களில் தண்ணீர், இரை வைத்தேன். ஆரம்பத்தில் ஒரு சில பறவைகள் வந்தன. தினமும் இரை, தண்ணீர் வைத்ததால் பறவைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. சிட்டுக்குருவிகள், மைனா, காகம் போன்ற பறவைகள் அதிகமாக வரத் தொடங்கின.
தற்போது 500-க்கும் மேற்பட்ட பறவைகள் தினமும் காலையில் வந்துவிடுகின்றன.
தினமும் அதிகாலையில் பறவைகள் வந்ததும் இரை கேட்டு அழைக்கும். அவற்றின் குரல் கேட்டு அவற்றுக்கு தானியங்கள், தண்ணீர் வைப்பேன். இரையை மகிழ்ச்சியாக உண்டுவிட்டு பறவைகள் சென்றுவிடும்.
வீடுகளில் கூடு கட்டி மனிதர்களோடு இணைந்து வாழ்பவை சிட்டுக்குருவிகள். வீடுகளில் கூடு கட்டுவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடங்கள் இருந்தால், சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வசிக்கும்.
சிட்டுக்குருவிகளுக்கு புகலிடம் அளிக்க அட்டைப் பெட்டி, மண் பானை ஆகியவற்றில் கூடு தயார்செய்து வருகிறேன். சிட்டுக்குருவிகளை காக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தகூடுகளை இலவசமாக வழங்கி வருகிறேன். கடந்த 3 மாதமாக தினமும்ஒரு வீட்டுக்கு சிட்டுக்குருவி கூடு வழங்கி வருகிறேன்” என்றார்.