Last Updated : 30 Apr, 2021 08:44 PM

 

Published : 30 Apr 2021 08:44 PM
Last Updated : 30 Apr 2021 08:44 PM

புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வர நள்ளிரவு வரை ஆகும்; மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

புதுச்சேரி

புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வர நள்ளிரவு வரை ஆகும் எனவும், வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் கரோனா தொற்று இல்லை என உறுதி சான்றுடன் வருவோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஏப். 30) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே. 2-ம் தேதி நடைபெற உள்ளது.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடைபெறுகிறது.

மத்திய அரசின் கரோனா விதிமுறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், உயர்நீதிமன்ற உத்தரவு என இவை அனைத்தும் பின்பற்றப்பட உள்ளது.

கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யும் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் அல்லது 2 முறை கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் அனுமதி வழங்கப்படும்.

கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்து கொண்டு வர வேண்டும். வெற்றி வேட்பாளர் சான்றிதழ் பெற வரும்போது 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வெற்றி ஊர்வலம் நடத்தக்கூடாது. அதே போல் வெற்றிபெற்ற உடன் இனிப்பும் வழங்கக்கூடாது.

கரோனா 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. எனவே கூட்டம் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அங்கு முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்படும்.

பிபிஇ கிட் வேண்டுமாலும் வாங்கிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் ரேபிட் கிட் முறையில் கரோனா பரிசோதனையும் செய்து கொள்ளலாம். 3 வாக்கு எண்ணிக்கை மையத்துக்கும் சுகாதாரத்துறை நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்கும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஏற்கெனவே ஒரு அறைக்கு 7 மேசைகள் போடப்பட்டது. தற்போது கரோனா விதிகளைப் பின்பற்றுவதால் ஒரு அறைக்கு 5 மேசைகள் போடப்பட்டுள்ளது.

இதனால் தேர்தல் முடிவுகள் வர சற்று காலதாமதம் ஆகலாம். புதுச்சேரி மாவட்டத்தல் உள்ள 23 தொகுதிகளில் காலை 8 மணிக்கு, முதல் 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். முன்னணி நிலவரம் 10 மணிக்கு தெரியவரும். இதன் முடிவு 12.30 மணி வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக 1 மணிக்கு 8 தொகுதிகள் எண்ணப்படுகிறது. அதன் முடிவுகள் தெரிய 6 மணி வரை ஆகலாம்.

இறுதியாக மாலை 6 மணிக்கு 7 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதன் முடிவு தெரிய நள்ளிரவு வரை ஆகலாம். ஒவ்வொரு தொகுதிக்கும் 4 முதல் 5 சுற்றுவரை செல்ல வாய்ப்புகள்ளது.

முகக்கவசம், கையுறை போன்றவைகளை அங்கு வைக்கப்பட்டுள்ள பையோ வேஸ்டில் போட்டுவிட்டுச் செல்ல வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்கள் மட்டுமின்றி, நகரம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பார்கள். ஆகவே மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.’’இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் உடனிருந்தார்.

முன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் அரசில் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும்போது என்னென்ன விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விலக்கி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x