இறைச்சிக் கடைகளுக்கு 2 நாட்கள் தடை: காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

காசிமேட்டில் மீன் வாங்குவதற்காகக் குவிந்த மக்கள்.
காசிமேட்டில் மீன் வாங்குவதற்காகக் குவிந்த மக்கள்.
Updated on
1 min read

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் மூடியிருக்கும் என்பதால், சென்னை, காசிமேட்டில் இன்றே பொதுமக்கள் மீன் வாங்கக் குவிந்தனர்.

தமிழகத்தில் தினந்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று (ஏப்.29) ஒரே நாளில் 17 ஆயிரத்து 897 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 445 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 31 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 1 லட்சத்து 12 ஆயிரத்து 556 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட மேலும் பல கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது இறைச்சிக் கடைகள் திறக்கப்படாது. இதனிடையே, சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெள்ளிக்கிழமையான இன்று (ஏப்.30) சென்னை, காசிமேட்டில் மீன் வாங்குவதற்காகப் பொதுமக்கள் குவிந்தனர். மீன்களை வாங்குவதற்காக பலரும் தனி மனித இடைவெளி இன்றியும், முகக்கவசம் அணியாமலும் வந்தனர். இதனால், காவல்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in