பிரகாஷ்: கோப்புப்படம்
பிரகாஷ்: கோப்புப்படம்

சென்னையில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் தகவல்

Published on

சென்னை மாநகராட்சியில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், கரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் இணைக்கப்பட்ட சிகிச்சை மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (ஏப்.30) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"சென்னை மாநகராட்சியில் தினமும் 6,000- 6,500 பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. பரிசோதனை செய்பவர்களுள் 20 சதவீதத்தினருக்குத் தொற்று ஏற்படுகிறது. இதனைக் குறைக்க பெருநகர சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இன்றுவரை சென்னை மாநகராட்சியில் 33 ஆயிரத்து 500 பேர் வீட்டுத் தனிமை உட்பட பல்வேறு சிகிச்சை நிலையில் உள்ளனர். இவர்களுள் 60-70 சதவீதத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 15-20 சதவீதத்தினர் கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10-15 சதவீதம் பேர் நோய்த்தீவிரம் அதிகமாக உள்ள நோயாளிகளாக இருப்பார்கள். மொத்தமாக சிகிச்சையில் உள்ளவர்களில், 3,550- 4,000 பேர் வரை உயர்தர சிகிச்சை தேவைப்படுபவர்களாக உள்ளனர்.

இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்பதுதான் மருத்துவ வல்லுநர்களின் கருத்து. சென்னையில் இப்போது தினந்தோறும் 6,000 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை வந்தாலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல் முன்னேற்பாடுகளைச் செய்துவருகிறோம்.

காய்ச்சல் சர்வே செய்வது ஒரு முறை. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் கண்காணிப்பது தனிப் பணி.

மருத்துவ ஆக்சிஜனுக்கான தட்டுப்பாடு நாடு முழுவதும் அதிகமாகியிருக்கிறது. சென்னை மாந்கராட்சியில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க இப்போதே நடவடிக்கை எடுத்துவருகிறோம். மருத்துவமனைகளில் மட்டும் 2,000 ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை மூலமாக பணிகளை மேற்கொண்டு வருகிறோம்".

இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in