சரக்கு வாகனங்களை மறித்து போக்குவரத்து போலீஸார் மாமூல் வாங்குவதைத் தடுக்க வேண்டும்: வாகன ஓட்டுநர்கள் அமைப்பு வலியுறுத்தல்

சரக்கு வாகனங்களை மறித்து போக்குவரத்து போலீஸார் மாமூல் வாங்குவதைத் தடுக்க வேண்டும்: வாகன ஓட்டுநர்கள் அமைப்பு வலியுறுத்தல்
Updated on
1 min read

கரோனா கட்டுப்பாடுகளால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இக்கட்டான நிலையிலும், சரக்கு வாகனங்களை மறித்து, போக்குவரத்து போலீஸார் வலுக்கட்டாயமாக மாமூல் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் என்று தென்னிந்திய வாகன ஓட்டுநர்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று தென்னிந்திய வாகன ஓட்டுநர்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்கு கழகத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.மார்ட்டின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.ரொசாரி, மாவட்டப் பொருளாளர் எஸ்.ஹரிஹரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், "கரோனா கட்டுப்பாடுகளால் போதிய வருமானம் இன்றி வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சாலை வரி, காப்பீட்டுக் கட்டணம், எப்சி உள்ளிட்ட வாகனங்களுக்கான அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கு நேரத்திலும் பல்வேறு மாநிலங்களில் சரக்குப் போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் சரக்கு வாகனங்களைப் போக்குவரத்து போலீஸார் மறித்து, வலுக்கட்டாயமாக மாமூல் வசூலிக்கின்றனர்.

இதைத் தடுக்க போலீஸாருக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். டீசல், பெட்ரோல், காஸ் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் சேர்க்க வேண்டும். வாகனங்களைச் சொந்தப் பயன்பாட்டுக்குப் பதிவு செய்து, வாடகை வாகனமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நிலவும் ஊழலைத் தடுக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதுகுறித்து ஓட்டுநர்கள் கூறும்போது, “வாகன ஓட்டுநர்கள் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்கள் பலரும் போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டுத்தான் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின்போது கடன் தொல்லை காரணமாக தமிழ்நாட்டில் 80க்கும் அதிகமான ஓட்டுநர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில், கரோனா கட்டுப்பாடுகளால் மீண்டும் ஓட்டுநர்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, வாகனங்களுக்கான வரிகளை ரத்து செய்வதுடன், போலீஸார் மாமூல் கேட்பதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in