Published : 30 Apr 2021 05:58 PM
Last Updated : 30 Apr 2021 05:58 PM

கரோனா நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 351 ஆக அதிகரிப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழகம் முழுவதும் கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல ஒதுக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 351 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று (ஏப்.29) ஒரே நாளில் 17 ஆயிரத்து 897 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 445 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 31 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 1 லட்சத்து 12 ஆயிரத்து 556 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, தமிழகம் முழுவதும் 1,303 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதில், கரோனா நோயாளிகளுக்காக 210 அவசர ஊர்திகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கரோனா பணிக்காக ஒதுக்கப்பட்ட ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 351 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தினசரி சுமார் 5,200 நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் (108) மூலம் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, 2,500 கரோனா நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

கரோனா நோயாளிகள் அதிகரிப்பால் தேவைக்கேற்ப அவசர ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 'கோவிட் கண்ட்ரோல் ரூம்' என்ற தனிக் கட்டுப்பாட்டு சேவை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. 044-40067108 என்ற தொலைபேசி எண் மூலம் இம்மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x